உள்நாடு

புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக குறைந்த பயன்பாட்டு காணிகளை வழங்கத் திட்டம்.

அரச காணிக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு அமைவாக ரத்து செய்ய வேண்டிய சுற்றறிக்கைகளை ரத்துச்செய்து புதிய  சுற்றறிக்கைகளை வெளியிடவும் திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டிய சுற்றறிக்கைகளை தற்காலத்திற்கு உகந்தவகையில் திருத்துவதற்காக அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ‘சுற்றறிக்கைகள் திருத்தக் குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்கவின் தலைமையிலான இந்தக் குழுவில்ஜனாதிபதி அலுவலகத்தின் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ விவகாரங்கள் பிரிவின் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்,ஜனாதிபதி அலுவலகத்தின் சட்ட ஆலோசகர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் (காணி), தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம்,மேல் மாகாண காணி ஆணையாளர், கிழக்கு நுவரகம்பலாத பிரதேச செயலாளர்,மதிப்பீட்டு திணைக்களத்தின் பிரதி பிரதம மதிப்பீட்டாளர், மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் (காணி) ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாகச் செயற்படுவர்.

இக்குழுவின் அழைப்பாளராக காணி ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய சட்ட விதிகளுக்குள், அரச வருமானம் சாதகமான முறையில் அதிகரிக்கும் வகையில், குத்தகைதாரர்கள் பாதிக்கப்படாதவாறு வரி வசூலிப்பில் நம்பகமான, சீரான மற்றும் நிலையான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நீண்ட கால குத்தகைகளை வழங்கும்போதும், இலவச காணி கொடுப்பனவுப் பத்திரங்களை  வழங்கும்போதும் வசூலிக்கப்படும் வருடாந்த வரிப் பணத்தை மீளாய்வு செய்தல், நீண்ட கால குத்தகைகளுடன் தொடர்புடைய ஏனைய சுற்றறிக்கைகளில் தற்காலத்திற்குப் பொருத்தமான மாற்றங்களைச் செய்தல்,அச்சுற்றறிக்கைகளை தேவைகளுக்கும் சட்ட விதிகளுக்கும் இணங்குமாறு திருத்துதல், சுற்றறிக்கைகள் தொடர்பான கட்டளைகளை திருத்துவதற்கும் புதிய கட்டளைகளை தயாரிப்பதற்கும் பரிந்துரைகளை வழங்குதல் என்பன இந்தக் குழுவின் பணியாகும்.

இதற்கமைய, சுற்றறிக்கைத் திருத்தம் தொடர்பாக நிபுணர் குழுவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறைந்த பயன்பாட்டிலுள்ள அரச காணிகளை தற்காலத்திற்கு உகந்த வகையில் பயன்படுத்துவதற்காக புதிய கொள்கையொன்றை வகுக்க வேண்டும் எனவும் இங்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். 

காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரவீந்திர பத்திரணகே, காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீரஆரச்சி உள்ளிட்ட குழுவின் ஏனைய உறுப்பினர்களும், நிதி அமைச்சு மற்றும் விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *