விளையாட்டு

அதிரடியால் இலங்கையை வீழ்த்தி, தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

இலங்கை அணிக்கு எதிரான ரி20 தொடரின் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும், இறுதியுமான பரபரப்பான போட்டியில் ரொதர்பேர்ட் மற்றும் ஹோல்டரின் அதிரடியில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 2:1 என கைப்பற்றியது.

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும், 2ஆவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றிருக்க தொடர் 1:1 என சமநிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான தீர்க்கமான போட்டி இன்று (15) ஜமைக்கா வில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் துனித் வெல்லாலகே 28 பந்துகளில் 43 ஓட்டங்களை அதிரடியாக விளாசினார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சில் சம்மர் ஜோஸப் 5 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினார்.

பின்னர் இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 170 என சவால் மிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் தொடரை 2:1 என தன்வசப்படுத்தியது.

துடுப்பாட்டத்தில் ரொதர்போர்ட் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும் இறுதியில் வந்த ஹோல்டர் ஆடாமிழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும், வெள்ளாலகே , தீக்சன மற்றும் சமீர ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *