Sunday, June 14, 2026
Latest:
உள்நாடு

கரைத்தீவு முந்திரி தோட்டத்தில் அறுவடைக்கு சென்றவர்கள் மீது தாக்குதல்வண்ணாத்தவில்லு பொலிஸில் புகார்

வண்ணாத்தவில்லு கரைத்தீவு பகுதியில் குத்தகைக்கு பெற்றிருந்த முந்திரி தோட்டத்தில் முந்திரி அறுவடை மேற்கொள்ளச் சென்றவர்கள் மீது சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் முரட்டுத்தனமான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வண்ணாத்தவில்லு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இச்சம்பவம் சனிக்கிழமை (13)மாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் குத்தகைதாரரான மொஹமட் நிபாஸ் மொஹமட் (30) மற்றும் அவரது ஊழியர்களான ஆர்.எம். ரிஷான் (19), ஐ.எம். ருக்ஷான் (25) ஆகிய அனைவரும் கற்பிட்டி ஏத்தாளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது

காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான வண்ணாத்தவில்லு கரைத்தீவு பகுதியில் அமைந்துள்ள முந்திரி தோட்டம், கற்பிட்டி ஏத்தாளை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த நிலையில், தோட்டத்தின் பாதுகாப்பிற்காக பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 9ஆம் திகதி அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மேற்படி முந்திரி தோட்டத்தில் சட்டவிரோதமாக முந்திரி சேகரிக்க தோட்டத்திற்குள் நுழைந்ததாக கூறப்படும் ஒருவரை பாதுகாப்பு பணியாளர்கள் தடுத்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட தகராறை அடுத்து மேற்கொள்ளப்பட்ட வாயு துப்பாக்கிச் சூட்டில் அதுகோரலகே பிரதீப் சுசந்த (38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்.

உயிரிழந்த பிரதீப் சுசந்த, கரைத்தீவு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்றும், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக முந்திரி சேகரிக்கச் சென்றபோது முதலில் தாக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முந்திரி தோட்டத்தில் பணியாற்றிய எட்டு பாதுகாப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பழிவாங்கும் தாக்குதலா?
இந்நிலையில், தாம் குத்தகைக்கு பெற்றிருந்த தோட்டத்தில் முந்திரி அறுவடை செய்யச் சென்றபோது சுமார் 100 பேர் கொண்ட குழுவொன்று திடீரென தாக்குதல் நடத்தியதாக குத்தகைதாரர் மொஹமட் நிபாஸ் மொஹமட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம், முன்னர் இடம்பெற்ற உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பழிவாங்கும் நடவடிக்கையா என்ற கோணத்திலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வண்ணாத்தவில்லு பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு முந்திரி தோட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பித்த மோதல், உயிரிழப்பு, கைது என்ற சம்பவம் பெரும் தாக்குதல் வரை சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *