தீகவாபி பிரகடனத்தினால் காணி இழந்தவர்களுக்கு 44 வருடங்களுக்கு பின் காணி வழங்க ஏற்பாடு; சுற்றாடல் அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிப்பு
நான்கு தசாப்தங்களுக்கு முன் தீகவாபி புனித பூமியாக அறிவிக்கப்பட்டதன் விளைவாக காணிகளை இழந்துள்ள 200 விவசாயிகளுக்கு பதில் காணியாக வழங்கவென பால்கேணி வட்டையில் முதற்கட்டமாக 38 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் பேராசிரியர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக்கூட்டம் 10ஆம் திகதி நடைபெற்றது.
அச்சமயம் திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, ‘பொன்னன்வெளி கண்டத்தில் நான்கு தசாப்தங்களுக்கு முன் காணிகளை இழந்த 200 விவசாயிகளுக்கு இன்னும் பதில் காணி வழங்கப்படாதிருப்பதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இங்கு உரையாற்றிய உதுமாலெப்பை எம்.பி, ‘அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்திருந்த பொன்னன்வெளிக் கண்டம் 1982 ஆம் ஆண்டில் தீகவாபி புனித பூமியாக அறிவிக்கப்பட்டது. அதனால் 200 முஸ்லிம் விவசாயிகள் காணிகளை இழந்தனர். தங்களின் காணிகளுக்கான உத்தரவுப்பத்திரங்களை அவர்கள் வைத்துள்ளனர். காணி இழந்தவர்களில் பல பேர் பதில் காணி கிடைக்காத நிலையில் மரணித்து விட்டனர்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், அம்பாறை மாவட்ட வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் காணிகள் விடுவிக்கும் விசேட கூட்டத்திலும் பொன்னன்வெளியில் காணி இழந்தவர்களுக்கு பதில் காணிகள் வழங்குவதற்கு முதற்கட்டமாக பால்கேணி வட்டையில் 38 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கு தீர்மானங்கள் மேற்கொண்ட போதும் இதுவரை உத்தியோகபூர்வமான முறையில் காணி விடுவிப்பு தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளரினால் அறிவிப்பு வழங்கப்படவில்லை.
முதற்கட்டமாக இக்காணியினை விடுவித்து பொன்னன்வெளியில் காணி இழந்தவர்களுக்கு பதில் காணி வழங்குவதுடன் காணி இழந்தவர்கள் எல்லோருக்கும் பதில் காணி வழங்குவதற்கு பொருத்தமான காணியினை விடுவிப்பதற்கும் வனப்பாதுகாப்புத் திணைக்களம் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இச்சமயம் அமைச்சர் பட்டபெந்தி, வன பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளரை பதிலளிக்குமாறு பணிப்புரை வழங்கினார். அதற்கமைய வன பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் பதிலளிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பால்கேணி வட்டையில் 20 ஏக்கர் காணி குத்தகை அடிப்படையில் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு மிகுதியாக உள்ள 38 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். விரைவில் அதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை அனுப்பி வைப்போம் என பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சருக்கும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் உதுமாலெப்பை எம்.பி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
