உள்நாடு

கற்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் 52 பேர் திடீர் இடமாற்றம்

கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைத் தவிர ஏனைய 52 அதிகாரிகளும் இடமாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைத் தவிர்ந்த ஏனைய 52 பொலிஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது கற்பிட்டி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், 24 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 15 அதிகாரிகள் எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய பணியிடங்களுக்கு மாற்றப்படுவதுடன் மீதமுள்ள 13 அதிகாரிகள் ஜூன் மாத இறுதிக்குள் இடமாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவரும் புத்தளம் பொலிஸ் பிரிவின் கீழ் இயங்கும் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அவர்களுக்கு பதிலாக புத்தளம் பிரிவின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 35 அதிகாரிகள் உடனடியாக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேற்படி இடமாற்றங்கள் அனைத்தும், அரச சேவை ஆணைக்குழுவினால் 2022 டிசம்பர் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட 2310/29 இலக்க நடைமுறை விதிமுறைத்தொகுப்பின் 258(1)ஆம் பிரிவின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 15 ம் திகதி சிலாபம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் தலைமையில் புத்தளம் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.

இச் சந்திப்பின் பின்னரே கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இந்த பாரிய அளவிலான இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த திடீர் மற்றும் விரிவான இடமாற்றம், புத்தளம் மாவட்டத்தின்a கற்பிட்டி பிரதேசத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிர்வாகங்களிலும் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்பது குறித்து பொதுமக்களும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *