சகல துறையில் பிரகாசித்த இலங்கை அணியிடம் வீழ்ந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.
முழுமையான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மேற்கிந்தியத் தீவுகள் சென்றுள்ள இலங்கை அணி முதலில் இடம்பெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஜமைக்கா மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை சந்தித்து.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஷங்க அரைச்சதம் கடந்து 79 ஓட்டங்களையும் இலங்கை ஒருநாள் அணியை முதல் முறையாய் வழிநடாத்தும் குசல் மெண்டிஸ் 72 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்க்க , பின்னர் வந்த சரித் அசலங்க 45 மற்றும் ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் தம் பங்கிற்கு சேர்த்துக் கொடுக்க 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் மத்தியூ போர்ட், றொஸ்டன் சேஸ் மற்றும் ஜேடன் சியல்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 304 ஓட்டங்கள் என்ற சவால் மிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களை மட்டுமே பெற்று 41ஓட்டங்களால் தோற்றுப் போனது. மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஷாய் ஹோப் 56 ஓட்டங்களையும், ஜஸ்டின் கிறேவ்ஸ் 45 ஓட்டங்களையும், றொஸ்டன் சேஸ் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 4 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளையும் , சரித் அசலங்க, வனிது ஹசரங்க மற்றும் அசித பெர்ணாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1:0 என முன்னிலை பெற்றுள்ளதுடன், இப் போட்டியின் நாயகனாக அணித்தலைவர் குசல் மென்டிஸ் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)
