இன்றிரவு இலங்கை வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதி.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி இன்று இரவு இலங்கை வருகைவியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), இன்று (07) இரவு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்தார்.
இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த அழைப்பிற்கு இணங்க, இந்த வருகை இடம்பெறுகிறது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நாடு நகரும் இத்தருணத்தில் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வியட்நாம் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.உலகில் ஒரு பிரதான உற்பத்தி மையமாக உருவெடுத்து, தற்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாகத் திகழும் வியட்நாமின் வலுவான அரசியல் மற்றும் பொருளாதார போக்குகளை இனங்கண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இலங்கையின் கைத்தொழில்மயமாக்கல் செயல்முறை மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளை வெற்றிகொள்வதற்கும் வியட்நாம் ஜனாதிபதியின் இந்த விஜயம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
குறிப்பாக உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறைகளில் வியட்நாம் பெற்றுள்ள அனுபவங்களை நாட்டுக்குப் பெற்றுக்கொள்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும். விவசாய நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுலாத் துறை போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதுடன், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஒரு பலமான வர்த்தக மையமாக விளங்கும் வியட்நாமுடன் நெருங்கிய உறவைப் பேணுவதன் மூலம் சர்வதேச சந்தைக்குள் நுழைவதற்கு இலங்கைக்கு புதிய வழிகள் திறக்கப்படும்.
அத்தோடு, வியட்நாமிடம் உள்ள வலுவான கைத்தொழில் அடித்தளம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வியட்நாம் சந்தையில் அதிக இட ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், இலங்கையின் இளைஞர் தலைமுறையினர் உலகளாவிய தொழிற் சந்தையில் நுழைவதற்கான கதவுகளைத் திறக்க இந்தத் இராஜதந்திர உறவு முக்கியமானதாக அமைகிறது.
எனவே, இது இரு நாடுகளினதும் பொருளாதார செழுமைக்காக நீண்டகால மூலோபாயக் கூட்டாண்மையை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருத முடியும்.
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (TO LAM) அவர்களை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நாளை (08) ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளதுடன், ஜனாதிபதி டோ லாம் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து வியட்நாம் அரச பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் பல துறைகள் சார்ந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.இந்த உயர்மட்ட தூதரகப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இரு நாடுகளினதும் பொதுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், அதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ஊடக அறிக்கையை வெளியிடவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, வியட்நாம் ஜனாதிபதி கொழும்பு பொது நூலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஹோ சி மின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தவுள்ளதுடன், கொழும்பு பொது நூலகத்தில் அமைந்துள்ள வியட்நாம்-ஹோ சி மின் வலயத்தில் (Vietnam-Ho Chi Minh Space) உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத் தொகுப்பையும் பார்வையிடவுள்ளார்.அதன் பின்னர், வியட்நாம் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகளுடன் வியட்நாம் ஜனாதிபதி நாளை (08) பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும் இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் கலாசார தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் புகைப்படக் கண்காட்சி மற்றும் வியட்நாமிற்கே உரித்தான உற்பத்திப் பொருட்கள், பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் அந்நாட்டின் நவீன கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியிலும் வியட்நாம் ஜனாதிபதி நாளை (08) கலந்துகொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி டோ லாம் இலங்கை – வியட்நாம் வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்தவுள்ளார். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவும் இலங்கை – வியட்நாம் வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், வியட்நாம் எயார்லைன்ஸ் (Viet Nam Airlines) மற்றும் வியட்ஜெட் எயார் (VietJet Air) மூலம் முன்னெடுக்கப்படும் கொழும்பு மற்றும் ஹோ சி மின் நகரம்/ஹனோய் இடையிலான நேரடி விமான சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதோடு அதற்கான ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்வும் இதன்போது நடைபெறும்.
வர்த்தக சந்திப்புகளை நிறைவு செய்த பின்னர், ஜனாதிபதி டோ லாம் தலைமையிலான தூதுக்குழுவினர் நாளை (08) இரவு தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்புவர்.

