உலகம்

ஒபெக்கிலிருந்து விலகுகிறது ஐக்கிய அரபு இராச்சியம்

உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியம், சுமார் 6 தசாப்தங்களாக அங்கம் வகித்து வந்த ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் அமைப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் நீண்டகால மூலோபாய மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒபெக் அமைப்பின் கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாகச் செயற்படுவது, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் முடிவுகளை எடுக்கத் தமக்கு உதவும் என அந்த அமைச்சு கருதுகின்றது.

ஐக்கிய அரபு இராச்சியம் 1967 ஆம் ஆண்டு இந்த அமைப்பில் இணைந்தது. 

தற்போது ஒபெக் அமைப்பில் இருந்து வெளியேறுவதால் மொத்த உற்பத்தித் திறனில் சுமார் 15 சதவீதத்தை அந்த அமைப்பு இழக்கின்றது.

‘இது ஒபெக் அமைப்பின் முடிவின் ஆரம்பம்’ என எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனமான MST பினான்சியல் நிறுவனத்தின் தலைவர் சவுல் கவோனிக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தை தொடர்ந்து ஏனைய உறுப்பு நாடுகளும் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஒபெக் அமைப்பின் தரவுகளின்படி, ஐக்கிய அரபு இராச்சியம் ஆண்டுக்கு 2.9 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

அத்தோடு, சவூதி அரேபியா ஒன்பது மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்து அமைப்பின் தலைமையாகச் செயற்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, எண்ணெய் சந்தையை நிர்வகிக்கும் பாரிய சுமை இனி சவூதி அரேபியா மீது மட்டுமே விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *