உழ்ஹிய்யா விவகாரம் தொடர்பில் சுமூகமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்குமாறு, ஜனாதிபதியிடம் பைஸர் முஸ்தபா அவசர வேண்டுகோள்
வெசாக் – ஹஜ்ஜுப் பெருநாள், இரண்டு சமயக் கடமைகளும் சமூகத்தில் மிக முக்கிய நிகழ்வுகள் என, ஜனாதிபதியிடமும் அவரது செயலாளரிடமும் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா சுட்டிக் காட்டியுள்ளார்.
உழ்ஹிய்யா விவகாரம் தொடர்பில் அவசரமாகவும் அவசியமாகவும் சுமூகமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்குமாறும், பைஸர் முஸ்தபா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொலைபேசி ஊடாகவே பைஸர் முஸ்தபா, இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இம்முறை வெசாக் வாரத்தை அரசாங்கம் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 28 ஆம் திகதி முஸ்லிம்கள் புனித ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.
முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கான காலம், ஹஜ்ஜுப் பெருநாள் தினமான “அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் பிறை 10) மே மாதம் 28 முதல், (துல்ஹஜ் பிறை 13) மே மாதம் 31 அஸர் தொழுகை நேரம் வரையிலாகும்.
இக்காலப் பகுதியிலேயே வெசாக் வாரமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் இறைச்சிக்கான பிராணிகளை அறுப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது என, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் பொது நிர்வாக அமைச்சு விசேட வர்த்தமானி மூலம் அறிவுறுத்தியுள்ளது.
இதனடிப்படையில், இக்காலப் பகுதியில் உழ்ஹிய்யாவுக்காக ஆடு மாடுகளை அறுப்பதும் தடை செய்யப்பட்டதாகக் கருத வேண்டியுள்ளது.
இதன் பின்னணியில், உழ்ஹிய்யாக் கொடுப்பது தொடர்பான பலரினதும் பல்வேறு கருத்துக்கள், தற்போது சர்ச்சையாக உருவாகியும் கேள்விக் குறியாகவும் மாறியுள்ளன.
எனவேதான், உழ்ஹிய்யா விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.
வெசாக் – ஹஜ்ஜுப் பெருநாள், இரண்டு சமயக் கடமைகளும் சமூகத்தில் மிக முக்கிய நிகழ்வுகளாக இருப்பதால், வெசாக் போயா தினமல்லாத ஏனைய நாட்களில் குறித்த விவகாரம் தொடர்பில் அவசரமாகவும் அவசியமாகவும் சுமூகமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்குமாறும், பைஸர் முஸ்தபா இருவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
