இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் துறைமுக ஊழியர்களுக்கு துறைமுக முஸ்லிம் மஜ்லிஸினால் கௌரவம்
இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக செல்கின்ற
இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு (24) வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இலங்கை துறைமுக அதிகார சபையின் பள்ளிவாசலில் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் இல்ஹாம் மசூர் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித மக்கா பயணமாகும் ஒன்பது துறைமுக ஊழியர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு ஹஜ் வழிகாட்டி நூலும் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் நிர்வாகம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகச் செல்கின்ற துறைமுக ஊழியர்களை வருடாவருடம் கௌரவித்து வருகின்றனர்.
இவ்வாறு பல நிகழ்வுகள் இந்நிர்வாக சபையினால் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
துறைமுக அதிகார சபையின் பள்ளிவாசலில் அன்றைய தினம் குத்பா பிரசங்கத்தை மருதமுனை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஊடகப் பிரிவின் ஆலோசகருமான அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா (நழீமி) மேற்கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில், முஸ்லிம் மஜ்லிஸ் நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட துறைமுக அதிகார சபையின் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
