ஆசியக்கிண்ண ரி20 தொடர் இன்று ஆரம்பம்; கிண்ணத்தை வேட்டையாட அசலங்க தலைமையில் இலங்கை
17 ஆவது ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடர் இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று 9ஆம் திகதி மிகக் கோலாகலமாக ஆரம்பமாக உள்ளது.
இன்றிலிருந்து எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் ஆசியாவின் முதல் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. அதற்கமைய இவ் 8 அணிகளும் ஏ மற்றும் பி என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதல் லீக் சுற்று இடம்பெறவுள்ளது.
அதற்கேற்ப குழு ஏ இல் இந்தியா, பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய 4 அணிகளும், குழு பி இல் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய 4 அணிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வகையில் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் 4 சுற்று எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத் தொடரின் சம்பியன் மகுடம் வெல்லும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் தொடரின் அனைத்து போட்டிகளும் டுபாய் மற்றும்அபுதாபியிலுள்ள மைதானங்களில் இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் தொடக்க நாளான இன்று ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 8 அணிக்கு அபுதாபியில் இடம்பெறவுள்ளது.
இத் தொடரில் சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணி வலுவாகவே திகழ்கிறது. இருப்பினும் குழு ஏ இல் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இலங்கை அணிக்கு சிறந்த போட்டியினை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

