விளையாட்டு

சீனன்கோட்டை ஸன்ரைஸ் கழகத்தின் பொன் விழா உதைபந்தாட்ட போட்டி சம நிலையில் முடிவு

பேருவளை சீனன்கோட்டை ஸன்ரைஸ் விளையாட்டுக் கழகத்தின் ஐம்பதாவது வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழா நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கில் 10 ஆம் திகதி (2024-11-10) மாலை கழக தலைவரும், ஜாமியா நளீமிய்யா கலாபீட தலைவருமான யாகூத் நளீம் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இலங்கையில் புகழ்பெற்ற உதைப்பந்தாட்ட அணியான கொழும்பு ஸவுன்டஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் தென்னிலங்கையில் புகழ்பெற்ற விளையாட்டுக் கழகமான சீனன்கோட்டை ஸன்ரைஸ் விளையாட்டு கழகத்திற்குமிடையே மின்னொளியில் சினேகபூர்வ கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் இரு அணிகளும் 1-1 (ஒன்றுக்கு ஒன்று) என்ற அடிப்படையில் கோல் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இரு அணி வீரர்களும் சிறப்பான முறையில் விளையாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுக் கொண்டதோடு இறுதியில் கொழும்பு ஸவுன்டஸ் அணிக்கு வெற்றியை ஸன்ரைஸ் அணி பெற்றுக் கொடுத்தனர்.

போட்டி இரவு 7:15 மணியளவில் ஆரம்பமானது. போட்டி ஆரம்பம் முதல் முடியும் தருவாய் வரை இரு அணி வீரர்களும் தமது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க மிகவும் உற்சாகத்துடன் விளையாடினர்.

இப்போட்டிக்கு பிரதம நடுவராக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தில் அங்கீகாரம் பெற்ற லஹிரு ஜயனேத்தி கடமையாற்றியதோடு சமீர, ஹைதர் ஜுனைத் மற்றும் சம்பத் ஆகியோர் உதவி நடுவர்களாக கடமை புரிந்தனர்.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் பியூட்டி ஜெம்ஸ் அதிபதி அல்-ஹாஜ் அஹ்ஸர் ஸவாஹிர் ஸன்ரைஸ் விளையாட்டு கழக வீரர்கள், உறுப்பினர்களுக்கென 200 ஜேஸி சீருடை தொகுதியை அன்பளிப்புச் செய்தார்.

இந்த விழாவில் ஜேர்மன் நாட்டின் மெயின் கின்ஸிக் கிரேஸ் மாநில முன்னாள் மாவட்ட அமைச்சர் கர்ல் எயர் கவுபர் அவரது பாரியார் திருமதி மரியொன் எயர் கவுபர் ஆஙியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். களுத்துறை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் டாக்டர். மனின் பெர்ணாந்து கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கு பரிபாலன கமிட்டி தலைவர் அல்-ஹாஜ் காமில் நளீம், பைரஹா பாம்ஸ் பணிப்பாளர்களில் ஒருவரான அல்-ஹாஜ் முபாரக் நளீம், சீனன்கோட்டை பள்ளிச் சங்க உப தலைவர் அல்-ஹாஜ் ஸப்வான் நயீம், உறுப்பினர் அல்-ஹாஜ் தஹ்லான் மன்ஸுர், சீனன்கோட்டை இரத்தினக்கல் வர்த்தக சங்க முன்னாள் தலைவர் கலாநிதி. எம்.இஸட்.எம் நிஸார் ஹாஜியார், பேருவளை உதைப்பந்தாட்ட சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.எம் பஸ்லான் உட்பட ஊர் பிரமுகர்கள் ஸன்ரைஸ் கழக உப தலைவர் அல்-ஹாஜ் அன்ஸார் ஜுனைத், செயலாளர் கிஸான் ஹாஷிம் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஸன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் துரித வளர்ச்சி குறித்து பிரதம அதிதியான கர்ல் எயர் கவுபர் பெரிதும் பாராட்டிப் பேசினார். இக் கழகத்தின் மூத்த உறுப்பினர்களை ஜேர்மனிக்கு அழைத்து பயிற்சி வழங்கியதையும் அவர் ஞாபகமூட்டினார்.

கழக தலைவர் யாகூத் நளீம் கழகத்தின் வளர்ச்சி சாதனைகள் பற்றியும், ஊர் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பையும் நினைவு கூர்ந்தார். நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கை உருவாக்கிய மர்ஹும் நளீம் ஹாஜியாரையும் பலரும் பாராட்டி பேசினர். நுஸ்ரத் ஹிலால் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வில் பங்குபற்றிய பிரமுகர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *