கட்டுரை

O/L பரீட்சை எழுதும் மாணவர்களின்  பெற்றார்களே..!  இது உங்களுக்கு..!

எமது பிள்ளைகள் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் போது பெற்றோர்களாக நாம் நடந்துகொள்ள வேண்டிய சில வழிமுறைகளை உங்கள் கவனத்திற்கு தருகின்றோம்.
அவற்றை பின்பற்றி பிள்ளையின் உள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஊக்கமும் உற்சாகமும் வழங்கி பரீட்சைக்கு தைரியமாக முகம் கொடுக்க வழிகாட்டலாம்.

அமைதியாக பேசுவோம்

பிள்ளையுடன் பேசும் போது அவசரப்படாமல் அமைதியாக பேசுவோம்.
பெற்றாரின் வார்த்தைகள் மிகவும் சக்திவாய்ந்தவை. ஊக்கம் தரும் வகையில் அழகான வார்த்தைகளை பேசுவோம்.
அவர்கள் ஏதேனும் சொல்ல வந்தால் நாம் அமைதியாக செவிமடுப்பதை பிள்ளைக்கு உணர்த்துவோம்.
நமது தடுமாற்றத்தை அல்லது டென்ஷனை அவர்களிடம் காட்டாதிருப்போம்..

கோரிக்கைகளை தவிர்த்துக் கொள்வோம்

நீ எப்படியோ சித்தியடைய வேண்டும் என்றோ, நீ சித்தியடைவது தான் எங்கள் எதிர்பார்ப்பு என்றோ, அல்லது
சித்தியடைய வேண்டும் என்பதற்காக ஏதாவது முறையில் வேண்டுகோள்கள், அழுத்தங்கள் கொடுப்பது நல்லதல்ல. ஏற்கனவே அழுத்தங்களால் அவதிப்படும் பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நாம் இளகிய மனமுடையவராக இருந்து பிள்ளையை எமது அழகான வார்த்தைகள் மூலம் நெகிழ்வு படுத்துவோம்…

பரீட்சை நாட்களில் நீண்ட நேரத்தை படிப்பில் செலவிடுவதை குறைத்து பிள்ளை ஓய்வாக இருப்பதும் முக்கியம் என்பதையும் புரியவைப்போம்.

 

மனச்சோர்வை புரிந்து கொள்வோம்

பிள்ளை பரீட்சை பற்றி மனச்சோர்வாக இருக்கக் காணும் போது அதை புரிந்துகொண்டு அவசரப்பட்டு பொருத்தமற்ற எதனையும் சொல்லிவிடாமல்…
பிள்ளை செய்வது அவருக்குப் போதுமானது என்பதை தெரியப்படுத்துவோம்..
மற்றவர்களுடன் போட்டியிடுவதற்காக நீங்கள் படிப்பதில்லை,
உங்கள் திறமையை வெளிப்படுத்தவும் அதை காணவுமே படிக்கிறீர்கள் என்று எடுத்துக்கூறுவோம்.

நேர்மறையான எண்ணங்களை உருவாக்க உதவுவோம்…

நேர்மறையான சுய எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுமாறு சொல்லிக் கொடுப்போம்..
உதாரணமாக……
▪️நான் தைரியசாலி..
▪️இந்தப் பரீட்சையில் நான் சிறப்பாக செயற்படுவேன்..
▪️நான் படித்திருக்கிறேன்..
▪️எனக்கு பதில்கள் தெரியும்..
▪️என்னால் தைரியமாக பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியும்..
என்று சொல்லுமாறு சொல்லிக் கொடுப்போம்.

“நல்ல சிந்தனையால் மட்டுமே வெற்றியாளராக ஆகமுடியும்”.. அதனால்
▪️’என்னால் முடியும்’
▪️’நான் சாதிப்பேன்’
என்ற எண்ணங்களை மனதிற்கு கொண்டுவருமாறு எடுத்துக்கூறலாம்.

 

ஒப்பிடுவதை தவிர்த்துக் கொள்வோம்..

பிள்ளையை மற்றப் பிள்ளைகளோடு ஒப்பிடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்வோம். பிள்ளைக்கும் தன்னை எந்தப் பிள்ளையுடனும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டாம் என்பதையும் எடுத்துச் சொல்வோம்.
▪️மற்ற பிள்ளைகள் எப்படிச் செய்வார்கள் என்று எண்ணுவதை விட்டுவிட்டு, உங்கள் திறன்கள் மீது அவதானம் செலுத்துங்கள் என்று சொல்லிக் கொடுப்போம்..

 

கவலைப்படத் தேவையில்லை என்பதை உணர்த்துவோம்…

▪️பரீட்சை பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் எதிர்பார்த்த அளவு அதிகம் செய்ய முடியாவிட்டால் நீங்கள் உங்களையே சங்கடப்படுத்திக்கொள்ள வேண்டியதுமில்லை. ஆனால் இப்போது கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களால் முடிந்தவரை முழுமையாகச் செய்ய முயற்சியுங்கள்… என்று கூறலாம்.

 

உறக்கமும் ஓய்வும்

இக்காலத்தில் பிள்ளைக்கு உறக்கமும் ஓய்வும் கட்டாயம் தேவை. பூரணமான உறக்கத்திற்கு நேரத்தை ஒதுங்கிக் கொடுப்போம். பிள்ளைக்கு 7-8 மணித்தியாலம் உறக்கம் அவசியமாகும். அழகாக ஆரோக்கியமாக உறங்கினால் அடுத்த நாளில் உடலும் உள்ளமும் சுறுசுறுப்பாக இயங்கும் என்பதை இரவில் நினைவு படுத்துவோம்.
உறக்கம் போன்று பூரணமான உணவும் பிள்ளைக்குத் தேவை. போசணை உணவு உடல் வளர்ச்சிக்கு மட்டுமன்றி சிந்தனை வளர்ச்சிக்கும் கட்டாயம் தேவைப்படுகிறது என்பதை சொல்லிக்கொடுத்து உணவு உட்கொள்ள ஊக்குவிப்போம்.

பிள்ளையின் தலை தடவி பிரார்த்திப்போம்… அது பிள்ளைக்கு நம்பிக்கையை கொடுக்கும்.  பெற்றாரின் அணைப்பும் பிரார்த்தனையும் மிகவும் பலமானவை என்று நாம் அறிவோம்…

சவால்கள் பலவற்றை சந்தித்து பரிட்சை எழுதும் உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சவால்களை சமாளிக்கக்கூடிய வல்லவர்களாக ஆகுவார்கள்.

உங்கள் பிள்ளைகள் மனதைரியத்துடன் பரீட்சைக்கு முகம்கொடுக்க வேண்டும் என்று உதயம் சார்பாக மனம் திறந்து பிரார்த்தனை செய்கிறோம்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *