உள்நாடு

கல்முனை பிரதேச மீனவ வாடிகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குரல் கொடுக்கும்; தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

கல்முனை பிரதேசத்தில் உரிய அனுமதி இன்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள், குடிசைகள், கொட்டகைகள் உள்ளிட்ட கட்டுமானங்களை 07 நாட்களுக்குள் இடித்து அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவத் திணைக்களம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் இக்கட்டளைக்கு எதிராக 03 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரிடம் மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் அறிவித்துள்ளது.

இந்நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவுள்ள தற்காலிக வாடி அமைத்திருக்கும் மீனவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம் அவர்களை நேற்று (26.11.2026) கல்முனையில் அமைந்துள்ள கட்சியின் அம்பாறை மாவட்டக் காரியாலயத்தில் சந்தித்து மாற்று ஏற்பாடுகள் எதுவுமில்லாமல் உடனடியாக அகற்ற எச்சரிக்கப்பட்டுள்ளதனால் தாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், இவ்விடயம் தொடர்பாக கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் குரல் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் கட்சியின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் ரிபான் உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இவ்விடயத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கட்சியின் அம்பாறை மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி.சமால்தீன் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களும் கலந்து கொண்டனர்.

(கே. எ. ஹமிட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *