Thursday, November 26, 2026
Latest:
உள்நாடு

16 மாவட்டங்களைச் சேர்ந்த 32 பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களுடன் ஜம்இய்யா விசேட ஆலோசனைக் கூட்டம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாப் பிரிவின் ஏற்பாட்டில், பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட ஆலோசனைக் கூட்டம் 2026 நவம்பர் 21அன்று கொழும்பு, புதுக்கடை மீரானிய்யா ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2027 ஜனவரி மாதம் பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களுக்காக நடத்தப்படவுள்ள மாநாட்டின் முன்னேற்பாடாக இவ்வாலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக, பைத்துஸ் ஸகாத் நிறுவனங்கள் தற்போது எதிர்நோக்கும் மார்க்க ரீதியான, நிதி முகாமைத்துவ, நிர்வாக மற்றும் கணக்காய்வு தொடர்பான சவால்களை இனங்காண்பதும், அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதுமே இக்கூட்டத்தின் பிரதான நோக்கங்களாக அமைந்திருந்தன.

நிகழ்வின் ஆரம்ப உரையை ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தன்து உரையில், பைத்துஸ் ஸகாத் நிறுவனங்கள் சமூகத்தில் ஆற்றிவரும் பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், அவற்றின் செயற்பாடுகளில் மார்க்க ரீதியான விடயங்களுடன் மாத்திரம் நின்றுவிடாமல், நிதி முகாமைத்துவம், முறையான கணக்குப் பராமரிப்பு மற்றும் நிர்வாக ஒழுங்குகள் போன்ற விடயங்களையும் உரிய முறையில் கவனத்திற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, ஃபத்வாக் குழுவின் மார்க்கக் கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வுகான குழுவின் பொறுப்பாளர் முஃப்தி கே.எச்.எம்.ஏ. மபாஸ் அவர்கள் இவ்வாலோசனைக் கூட்டத்தின் நோக்கங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

இதனையடுத்து, வருகை தந்திருந்த பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களின் பிரமுகர்கள் 08 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, விசேட குழுக் கலந்துரையாடலும் செயலமர்வும் நடத்தப்பட்டது. இதன்போது, ஒவ்வொரு குழுவுக்கும் கேள்விப் படிவங்கள் வழங்கப்பட்டு, தத்தமது நிறுவனங்கள் எதிர்நோக்கும் சவால்கள், நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான ஆலோசனைகளைத் தொகுத்து முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, ஃபத்வாக் குழுவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா அவர்கள் ஸகாத் நிதியைச் சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் உரிய பயனாளிகளுக்கு விநியோகித்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளிலும் ஷரீஆவின் சட்டதிட்டங்களையும் வரையறைகளையும் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தினார்.

அதனையடுத்து, ஃபத்வாக் குழுவின் உப செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான் அவர்கள் உரையாற்றினார். அவர் தனதுரையில், ஸகாத் தொடர்பான விடயங்களில் ஷரீஆ விதித்துள்ள சட்டதிட்டங்களையும் வரையறைகளையும் உறுதியாகப் பற்றிப்பிடித்துச் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் மார்க்கம் நெகிழ்வுத் தன்மையை வழங்கியுள்ள விடயங்களில் அதனைப் பயன்படுத்தி சமநிலையான அணுகுமுறையுடன் செயற்பட வேண்டுமென வழிகாட்டினார்.

நிகழ்வின் இறுதியில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் விசேட உரையாற்றினார். அவர் தனது உரையில், பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களை மேலும் வலுவூட்டுவதன் அவசியத்தையும் அவற்றின் செயற்பாடுகளைத் திட்டமிட்ட முறையில் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

குறிப்பாக, வக்ஃப், ஸதகா, ஹதிய்யா, நேர்ச்சைப் போன்ற வழிமுறைகளையும் பயன்படுத்தி மக்களைப் பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான திட்டங்கள் தொடர்பில் ஆலோசித்து செயற்பட வேண்டுமென குறிப்பிட்டதுடன், பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களின் நிர்வாக மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக, அந்தந்த ஊர் மக்களின் பங்களிப்புடன் தனியான வக்ஃப் அல்லது தர்ம நிதி ஏற்பாடுகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் முன்வைத்தார்.

மேலும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் பைத்துஸ் ஸகாத் திட்டத்தினை நிறுவி நடைமுறைப்படுத்தியது போல நாட்டிலுள்ள 3,000 மஸ்ஜிதுகளிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் தலைவர் தனதுரையில் வலியுறுத்தினார்.

அத்தோடு, பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களை நிறுவுவதற்கும் அவற்றின் செயற்பாடுகளை வலுவூட்டுவதற்கும் ஜம்இய்யாவினால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளையும் தலைவர் நினைவுகூர்ந்ததுடன் அவற்றில் முக்கிய பங்காற்றிய அஷ்-ஷைக் ரூமி அவர்களும் இந்நிகழ்வில் தமது அனுபவங்களையும் கடந்த காலச் செயற்பாடுகளையும் சபையோருடன் பகிர்ந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, நுவரெலியா, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, பதுளை, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் புத்தளம் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த 32 பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 72 பிரமுகர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமது பெறுமதியான கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்ட அனைத்து பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், நிகழ்வை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய அஷ்-ஷைக் ஹைதர் அலி அவர்களுக்கும் நிகழ்வை நடத்துவதற்குத் தேவையான இடவசதிகளையும் இதர ஒத்துழைப்புகளையும் வழங்கிய கொழும்பு, புதுக்கடை மீரானியா ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினருக்கும், ஃபத்வா பிரிவின் ஆளணியினரான அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம் அஷ்-ஷைக் ஹாரூன், அஷ்-ஷைக் முஹம்மத் ஸகீர், அஷ்-ஷைக் ஹலீமுல்லாஹ் மற்றும் அஷ்-ஷைக் முஹம்மத் ஆகியோருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

கலந்துகொண்ட பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களின் மாவட்ட ரீதியான விபரங்கள்:

  1. Colombo District:

Dematagoda
Aluthkade
Wellampitiya
Colombo
Bambalapitiya

  1. Gampaha District:

Thihariya

  1. Kalutara District:

Kalutara
Atulugama

  1. Kandy District:

Watadeniya, Gampola

  1. Nuwara Eliya District:

Nuwara Eliya

  1. Kegalle District:

Aranayaka
Kotiyakumbura
Nangalla / Thulhiriya

  1. Kurunegala District:

Madawakkulam
Kuliyapitiya

  1. Ratnapura District:

Balangoda

  1. Hambantota District:

Bandagiriya

  1. Badulla District:

Badulla

  1. Polonnaruwa District:

Katuwanwila
Polonnaruwa

  1. Anuradhapura District:

Anuradhapura
Nochchiyagama

  1. Trincomalee District:

Trincomalee Town
Mutur
Kinniya
Kantale

  1. Batticaloa District:

Kalkuda

  1. Ampara District:

Sammanthurai
Ninthavur

  1. Puttalam District

Madawakulam
Kottaramulla
Kalpitiya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *