கொட்டஹென டொக்டர் பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரி பழைய மாணவர்களின் 4ஆவது உள்ளக கிரிக்கெட் எதிர்வரும் ஞூயிறன்று
கொழும்பு,கொட்டஹென டொக்டர் பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், நான்காவது முறையாகவும் ஒரு அணிக்கு 8 வீரர்கள் வீதம் பங்கேற்கும் உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி அம்பத்தளை உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இச்சுற்றுப்போட்டியை முன்னிட்டு அணிகளுக்கான உத்தியோகபூர்வ சீருடைகள் (jerseys) மற்றும் வெற்றிக் கேடயங்கள் அறிமுகப்படுத்தும் நிகழ்வும், போட்டியில் பங்கேற்கும் அணிகளை ஒழுங்குபடுத்தல் தொடர்பான ஊடக அறிமுக நிகழ்வும், அனுசரணையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்றுமுன்தினம் (24) வெல்லம்பிட்டி டேவ் ரொர்ப் கிரேண்ட் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் ஏ.எஸ்.எம். ஜப்ரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுற்றுப்போட்டியின் முக்கிய அம்சங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், போட்டிக்கான ஆதரவை வழங்கி வரும் அனுசரணையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அனீஸ் இஸ்மாயில் மற்றும் செயலாளர் ஏ.கே.எம். ஹக்கீம் ஆகியோரின் நேரடி வழிநடத்தலில், விளையாட்டுக் குழுவின் தலைவர் றிப்ஹாஸ் ராபி, செயலாளர் அஸீஸ் ஹனிபா உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவினர் இணைந்து இந்த ஊடக அறிமுக நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பழைய மாணவர்களிடையே ஒற்றுமை, நட்புறவு மற்றும் விளையாட்டு ஆர்வத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வுள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) அம்பத்தளை உள்ளக அரங்கில் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது.




(இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்)
