“ஹமீத் அல் ஹுசைனியின் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் – 2026” சிறப்பாக நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பாராட்டு விழா
கொழும்பு – ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்து, கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் – தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பாராட்டு விழா – 2026 கல்லூரி வளாகம், பௌஸி மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
காலை முதலே பௌஸி மண்டபம் வண்ண விளக்குகளாலும், மலர் அலங்காரங்களாலும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பெருமிதத்துடன் அழைத்து வந்திருந்தனர். ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டதால், மண்டபம் நிரம்பி வழிந்தது.
அதிபரின் வழிகாட்டலில் சிறப்பான ஏற்பாடு
இந்நிகழ்வு, கல்லூரி அதிபர் திருமதி என். ஷானியா டியான் (எஸ்.எல்.பி.எஸ்.) வழிகாட்டலிலும், பிரதி அதிபரும் ஆரம்பப் பிரிவு பொறுப்பாசிரியருமான திருமதி முஸ்னிய வின் நெறிப்படுத்தலிலும் முன்னெடுக்கப்பட்டது.
ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் குழுவினர் பல வாரங்களாக இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாணவர்களின் வரவேற்பு நடனம், பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் அழகு சேர்த்தன.
பிரதம அதிதியாக,
கொழும்பு கல்விப் பிரதிப் பணிப்பாளர்
திருமதி சமாலி எதிரிசிங்க,
கௌரவ அதிதியாக, சிரேஷ்ட தொழில் வழிகாட்டி ஆலோசகர் திரு சுஹைர் காதர்
மற்றும் அதிதிகள் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். அதன் பின்னர் அதிபரினால் அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
சாதனையாளர்களுக்கு பாராட்டு
புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவரும் மேடைக்கு அழைக்கப்பட்டு, பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் மண்டபம் முழுவதும் கைதட்டல் ஒலியால் நிறைந்தது. பல பெற்றோர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தெரிந்தது.
தமது உரையில் பிரதம அதிதி திருமதி சமாலி எதிரிசிங்க,
“இது வெறும் ஒரு பரீட்சை வெற்றி மட்டுமல்ல. இது உங்கள் வாழ்க்கையின் முதல் பெரிய வெற்றி. இந்த வெற்றிக்குப் பின்னால் உங்கள் ஆசிரியர்களின் கடின உழைப்பும், பெற்றோரின் தியாகமும் இருக்கிறது. அதை ஒருபோதும் மறக்காதீர்கள்” என்று குறிப்பிட்டார்.
கௌரவ அதிதி திரு சுஹைர் காதர் தனது உரையில்,
_”மாணவர்கள் எதிர்காலத்தில் தங்கள் இலட்சியங்களை நோக்கி எவ்வாறு பயணிக்க வேண்டும்” என்பது குறித்து, மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.
நன்றி கூறலுடன் நிறைவு
அதிபர் திருமதி என். ஷானியா டியான் தனது உரையில், வெற்றி பெற்ற மாணவர்களை மட்டுமல்லாமல், பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களையும், அவர்களை வழி நடத்திய ஆசிரியர்களையும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களையும் மனதாரப் பாராட்டினார்.
இறுதியில் நன்றியுரையுடனும், குழு புகைப்படங்களுடனும் விழா இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்வில் அதிதிகள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.





( ஐ. ஏ. காதிர் கான் )
