விளையாட்டு

தொடர்ச்சியாக 19 ஆவது ஆண்டாக நடைபெறும் ப்ரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளையோர் கிரிக்கெட் தொடர்

தொடர்ச்சியாக 19 ஆவது ஆண்டாக, சிலோன் அக்ரோ இன்டஸ்ட்ரி நிறுவனம் (ப்ரிமா குழுமம் – இலங்கை), இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து ப்ரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளையோர் கிரிக்கெட் தொடர் 2026க்கு (SLYL) அனுசரணை
வழங்குகின்றது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேசிய வீரர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
இந்தத் தொடர், வீரர்கள் தேசிய மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தி, அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெற்று, தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

50 ஓவர்கள் கொண்ட இந்தக் கிரிக்கெட் தொடரில், கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, தம்புள்ளை, காலி
மற்றும் கண்டி ஆகிய ஐந்து மாகாண அணிகள் பங்கேற்கவுள்ளன.

எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை கொழும்பிலுள்ள நான்கு
மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.


அதன்படி, அரையிறுதிப் போட்டிகள் டிசம்பர் 3 ஆம் திகதியும், இறுதிப் போட்டி டிசம்பர் 5 ஆம் திகதி
கொழும்பு எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளன.


இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் உபுல் நவரத்ன பண்டார,

இளம் வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், படிப்படியாக
அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறுவதற்கும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், நாட்டின் எதிர்கால கிரிக்கெட் திறமையாளர்களை உருவாக்குவதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்தச்செயற்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாக ப்ரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளையோர் கிரிக்கெட்
தொடர் அமைந்துள்ளதாகவும், வளர்ந்து வரும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு, அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கு இந்தத் தொடர் உதவுவதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் உபுல் நவரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு முதல் இத்தொடரின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராகச் செயற்பட்டு வரும் ப்ரிமா குழுமம், திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை வளர்த்தெடுக்கும் நோக்கில், 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளையோர் கிரிக்கெட் தொடருக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகின்றது.

இந்தத் தொடரின் ஊடாகத் தமது திறமைகளை வெளிப்படுத்தி முன்னேறிய பல வீரர்கள், பின்னர்
இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், சரித் அசலங்க, பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹசரங்க உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இந்தத் தொடரின் ஊடாக உருவாகியுள்ளனர்.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *