கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது; வலயக் கல்விப் பணிப்பாளர்
கல்முனை கல்வி வலயப் பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடுகள் காணப்பட்டதாகப் பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தெரிவித்துள்ளார்.
குறித்த செய்திகளில், மாணவர்களுக்கு சமைக்கப்படாத கோழி இறைச்சி வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அவ்வாறானதொரு சம்பவம் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட எந்தவொரு பாடசாலையிலும் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், மாணவர்களுக்கு சமைக்கப்படாத கோழி இறைச்சி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் உண்மையாக இடம்பெற்றிருந்தால், அதற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளரிடமோ அல்லது வலயக் கல்விப் பணிப்பாளரிடமோ முறைப்பாடுகள் கிடைத்திருக்க வேண்டும். எனினும், இவ்வாறான எந்தவொரு முறைப்பாடும் தமக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
எவ்விதமான உறுதிப்படுத்தலும் இன்றி தன்னிச்சையாக இவ்வாறான செய்திகளை வெளியிடுவது ஊடகப் பொறுப்புக்கு முரணானது எனவும், நிறுவன ரீதியான விடயங்கள் தொடர்பான செய்திகளைப் பிரசுரிப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவரிடம் தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்வதே ஊடக தர்மமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குறித்த செய்திகளை வெளியிட்ட ஊடக நிறுவனங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தவறியுள்ளதாக கல்முனை வலயக் கல்விப் பணிமனை விசனம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வலயக் கல்வி அதிகாரிகள், வெளியான செய்திகளின் உண்மைத்தன்மையை மீளாய்வு செய்து, அவற்றுக்கான மறுப்பறிக்கையை சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், குறித்த செய்தியை கல்முனை கல்வி வலயத்தின் சிற்றூழியர் ஒருவரே ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளதாக ஊடகப் பிரதானிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
(நூருல் ஹுதா உமர்)
