உள்நாடு

“சமாதானமும் ஒற்றுமையும் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்”; புத்தளம் ஆனந்தா பாடசாலையில் விசேட நிகழ்வு

அனைத்து மக்களும் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து, சாந்தியும் சமாதானமும் ஒற்றுமையும் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில், “ஒற்றுமையே சமூகத்தின் மிகப்பெரும் பலம்” என்ற தொனிப்பொருளில் புத்தளம் ஆனந்தா பாடசாலையில் விசேட நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனந்தா பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நான்கு மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள் அழைக்கப்பட்டு, சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அவசியம் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இதன்போது, ஒவ்வொரு மதத்தினரும் தங்களது மதம் போதிக்கும் ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் மற்றும் பிற சமூகத்தினருடன் நல்லிணக்கமாக வாழ்வதன் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

ஒரு நாடு முன்னேற்றமடைவதற்கு அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் இடையில் ஒற்றுமையும் பரஸ்பர புரிந்துணர்வும் அவசியமாகும். இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து, ஒருவரையொருவர் மதித்து, சகோதரத்துவத்துடன் வாழ்வதன் மூலமே அமைதியானதும் அபிவிருத்தியடைந்ததுமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதும் இந்நிகழ்வின் முக்கிய செய்தியாக அமைந்தது.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்த ஆனந்தா பாடசாலை அதிபர், ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் கலந்து சிறப்பித்த அனைத்து மதத் தலைவர்களுக்கும், இதற்காகப் பங்களிப்புச் செய்த அனைவருக்கும்
ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி) மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து எமது தாய்நாட்டைக் கட்டியெழுப்புவோம். இன, மத பேதமற்ற ஒற்றுமையான சமூகத்தையும், முழு உலகிற்கும் முன்மாதிரியாகத் திகழக்கூடிய அழகிய இலங்கையையும் உருவாக்குவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *