தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் பிரதிகளைவிடுவிப்பதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தவும்; பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சுனில் செனவி
தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல் குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்துமாறு பணிப்புரை வழங்கிய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, 2019 முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 83 அரபு மத்ரஸாக்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் விரைவுபடுத்துமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் நேற்று (17 ஆம் திகதி) பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இச்சமயம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, கடந்த ஆட்சிக் காலம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகள் இன்னும் விடுவிக்கப்படாதிருப்பதையும், 83 அரபு மத்ரஸாக்கள் பதிவு செய்யப்படாதிருப்பதையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த சமயமே அமைச்சர் சுனில் செனவி மேற்படி அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை உரையாற்றுகையில், கடந்த ஆட்சிக் காலத்தில் புனித குர்ஆன் பிரதிகள் விடுவிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டதோடு முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்திடம் பதிவு செய்வதற்கு விண்ணப்பம் செய்த 83 அறபுக்கல்லூரிகளின் பதிவுகளும் இற்றைவரையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்றதும் கடந்த ஆட்சிக்காலத்தில் தடுத்து வைக்கப்பட்ட புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்கவும் 83 அறபுக்கல்லூரிகளை பதிவு செய்யாதுள்ள பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்து 02 வருடங்கள் சென்ற நிலையிலும் இவ்விவகாரம் நீடிப்பதையிட்டு என எமது முஸ்லிம் சமூகம் மிகவும் கவலையடைந்திருக்கின்றது.
இக்குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததோடு, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, சூரா சபை மற்றும் முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் அமைப்பினர் என முழு சமூகமும் ஜனாதிபதியிடமும் அமைச்சரிடமும் பிரதி அமைச்சரிடமும் பல தடவைகள் ஒற்றுமைப்பட்டு கோரிக்கை விடுத்தும் இதுவரையும் இக்குர்ஆன் பிரதிகள் விடுவிக்கப்படாதுள்ளன.
அமைச்சர் சுனில் செனவி, சகல இன மக்களுடனும் நீதி நியாயமாக செயற்பட்டு வருகிறார். அவரை நாங்கள் பாராட்டுகிறோம். புனித ரமழான் மாதம் நெருங்கிக் கொண்டிருப்பதால் விரைவாக இக்குர்ஆன் பிரதிகளை விடுவிக்கவும் குறித்த 83 அறபுக் கல்லூரிகளின் பதிவுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இச்சமயம் முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் குறிப்பிடுகையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கான அறிவுறுத்தல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி ஏற்கனவே வழங்கியுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு முஸ்லிம் சமூகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீண்டகாலமாக என்னிடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும், இது தொடர்பாக தான் பாராளுமன்றத்திலும் பதிலளித்துள்ளேன் என்றதோடு புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுக்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தத் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சின் செயலாளர், முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கினார்.
