உள்நாடு

ஞானசார தேரரின் சிறைத் தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

குறித்த தண்டனையிலிருந்து தம்மை நிரபராதி என விடுதலை செய்யுமாறு கோரி ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி கொழும்பு கிருலப்பனை பகுதியில் கூரகல விகாரை தொடர்பாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்களின் மூலம் இஸ்லாம் மதத்தை அவமதித்தமை மற்றும் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 291 ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டில் நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்திருந்தது.

அந்தத் தண்டனைக்கு எதிராகவே ஞானசார தேரரினால் இந்த மேன்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *