உள்நாடு

கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கத்தினால் நடாத்தப்பட்ட வாசிப்பு மாத போட்டியில் போட்டியில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு நிகழ்வு

கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (17) வத்தளை நகர சபை மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் எம்.ஆர். மொஹிடீன் தலைமையில் இடம்பெற்றது.

தமிழ் மற்றும் சிங்களமொழி மூல சுமார் 20 பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 6 தொடக்கம் 12 ஆம் தர மூவின சமுகத்தையும் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மூன்று பிரிவுகளில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கே ஐ.ஐ.எச்.எஸ் கல்வி நிலையத்தின் அனுசரணையில் சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக சங்கத்தின் இணைச் செயலாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மில் தெரிவித்தார்.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஐ.ஐ.எச்.எஸ் நிறுவனத்தின் நிறுவுனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான வைத்தியர் கித்சிறி எதிரிசிங்க கலந்து கொண்டிருந்தார்.விசேட அதிதிகளாக முன்னாள் நீதியரசர் எம்.எம்.ஏ.கபூர், மில்கான் பவுண்டேசனின் நிறுவுனர் மில்கான் சதார்,முன்னாள் பரீட்சை ஆணையாளர் எம்.எம்.மொஹமட், சிரேஷ்ட ஊடகவியாலாளர் பி.எம்.முர்சிடீன், த ஓசின் ஸ்கில் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.ஐ.எம்.சுபைர்,ஏ.கே. ஒமர் உள்ளிட்ட பல பிரமுகர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் வரவேற்புரையை சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.மொஹிடீன் வழங்கினர், இதன்போது பிரதம அதிதியின் உரை,விசேட அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் நீதியரசர் எம்.எம்.ஏ.கபூர், மற்றும் முதல் இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றன. நன்றியுரையை சங்கத்தின் உறுப்பனர் ஷாபி வழங்கினார்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *