உள்நாடு

கிரிஷ் வழக்கில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை தற்காலிகமாக இடைநிறுத்தியது கொழும்பு மேல் நீதிமன்றம்

கிரிஷ் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்ச ஊழல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை இடைநிறுத்தி, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த நவம்பர் 3ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது.

குறித்த பிணை உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை இரத்துச் செய்து நாமல் ராஜபக்ஷவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறும் ஆணைக்குழு தனது மனுவில் கோரியிருந்தது.

2013ஆம் ஆண்டு கிரிஷ் நிறுவனத்திடமிருந்து சுமார் 70 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டுஇ அந்நிறுவனத்துக்குச் சாதகமாக அரசியல் பலத்தை பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள ட்ரான்ஸ் வேர்க்ஸ் சதுக்கக் காணியில் கிரிஷ் நிறுவனத்தின் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்துக்கு அனுமதிகளை விரைவுபடுத்துவதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

எனினும், கடந்த நவம்பர் 3ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியிருந்தது. வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

பிணைக்கு எதிராக ஆணைக்குழு ஆட்சேபனை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149(1)ஆம் பிரிவின்படி, விசேட சூழ்நிலைகள் இல்லாத பட்சத்தில் சந்தேகநபர் வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என வாதிட்டிருந்தனர்.

அதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் தாயாருக்கு ஏற்பட்டிருந்த தீவிர இருதய நோய் பாதிப்பைக் கருத்திற்கொண்டே பிணை வழங்கப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பிணை வழங்கிய நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவை இடைநிறுத்துமாறு ஆணைக்குழு கோரியிருந்த நிலையில், அதற்கு எதிராக நாமல் ராஜபக்ஷ தரப்பு சட்டத்தரணிகளும் தமது ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.

தற்போது மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளதால், நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர் ஏற்கனவே எயார்பஸ் கொள்வனவு ஊழல் வழக்கிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆகவே, கிரிஷ் வழக்கில் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளமை அவரது சட்ட நிலைமையில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *