இலங்கைத் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவதற்கு கருத்து முரண்பாடுகளைக் களைந்து ஒன்றுபட்டுச் செயல்படுவது அவசியம்; மு. தமிமுன் அன்சாரி MLA
இலங்கையில் வாழும் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் தான் முழுமையான அக்கறை கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் இரு சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், சமூகத் தலைவர்கள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஆர்வமாக இருப்பதாகவும் தமிழக சட்டமன்றத்தின் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மு. தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கைக்கும் தனது குடும்பத்தின் மூதாதையர்களுக்கும் இடையில் நீண்டகாலமாக நெருக்கமான தொடர்புகள் இருந்து வந்துள்ளதாகவும், அந்தப் பூர்வீக உறவுகளின் அடிப்படையில் இலங்கை மக்களுடன் தாமும் நெருக்கமான நல்லுறவைப் பேணி வருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் வாழும் தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு இரு தரப்பினருக்கும் இடையிலான ஒற்றுமையும், புரிந்துணர்வும் மிகவும் அவசியமானவை எனச் சுட்டிக்காட்டிய அவர், சமூகங்களுக்கிடையில் காணப்படும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, பரஸ்பர நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் இரு சமூகங்களுக்கும், இடையில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களையும் முரண்பாடுகளையும் கடந்து, எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய காலத்தின் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழர் – முஸ்லிம் மக்களிடையே நிலவும் பிரச்சினைகளையும், சவால்களையும் பரஸ்பரப் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் புரிந்துணர்வின் ஊடாகவும் அணுகுவதன் மூலம் ஆரோக்கியமான உறவைக் கட்டியெழுப்ப முடியும் எனத் தெரிவித்த தமிமுன் அன்சாரி, இதற்கான முயற்சிகளில் தாம் ஆர்வத்துடன் பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர்களின் தலைவராக இருந்த தந்தை செல்வா மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக செயல்பட்ட காலம் சென்ற வழக்கறிஞர் அஷ்ரப் ஆகியோர் காலத்தில் கூட்டாக இணைந்து அரசியலில் பணியாற்றியதையும் நினைவு கூர்ந்து பேசிய அவர் ,இது போன்ற அரசியல் நல்லிணக்க நடவடிக்கைகளையும் பிராந்திய சூழலுக்கு ஏற்ப மேற்கொள்வதும் புதிய நலன்களை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார்.
(இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்)
