இலங்கை கால்பந்தின் தடுப்புச் சுவர் சுஜன் பெரேரா சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு
இலங்கை தேசிய கால்பந்து அணியின் நீண்டகால அணித்தலைவரும், அனுபவமிக்க கோல் காப்பாளருமான சுஜன் பெரேரா சர்வதேச கால்பந்திலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு இலங்கை தேசிய அணிக்காக தனது சர்வதேசப் பயணத்தை ஆரம்பித்த சுஜன் பெரேரா, சுமார் 15 ஆண்டுகள் நாட்டுக்காக விளையாடிய பின்னர் தனது சர்வதேசப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தனது ஓய்வு முடிவை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமருக்கு கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தனது கால்பந்து பயணத்தில் ஆதரவளித்த அனைவருக்கும் அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
சுஜன் பெரேராவின் சர்வதேச சாதனைகள்!
- சர்வதேச அறிமுகம் – 2011
- சர்வதேச ஓய்வு – 2026
- தேசிய அணிக்காக விளையாடிய போட்டிகள் – 68
- இலங்கை அணியின் நீண்டகால அணித்தலைவர்களில் ஒருவர்.
- பல இளம் கால்பந்து வீரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.
2027 மார்ச் மாதம் பிரியாவிடை நிகழ்வு!
சுஜன் பெரேராவின் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், 2027 மார்ச் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்துப் போட்டியின்போது விசேட கௌரவிப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்ய இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
மேலும், தனது அனுபவத்தையும் அறிவையும் அடுத்த தலைமுறை கோல் காப்பாளர்களுக்குப் பகிர்ந்துகொள்ளும் வகையில், எதிர்காலத்தில் கோல் காப்பாளர் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றுவது குறித்தும் சுஜன் பெரேரா பரிசீலிக்க வேண்டும் என FFSL தலைவர் ஜஸ்வர் உமர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒரு கோல் காப்பாளராக ஆரம்பித்து, அணித்தலைவராக உயர்ந்து, இலங்கை கால்பந்துக்காக 68 சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கிய சுஜன் பெரேராவின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.
