“கிரிஷ்” வழக்கு; நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார் நாமல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் வினவி, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்ததன் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொடவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
