மூத்த ஊடகவியலாளர் எம்.ஜே.ஏம். தாஜுதீன் காலமானார்
“சிரேஷ்ட பத்திரிகையாளரும், பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவருமாகிய ‘கலாபூஷணம்’ எம்.ஜே.எம். தாஜுத்தீன் அவர்களது மறைவு, நீர்கொழும்பு மண்ணிற்கும், தமிழ் ஊடக உலகிற்கும் பேரிழப்பாகும்” என, அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனத்தின் தலைவர் ‘கலையமுதன்’ எம். நிஜாமுதீன், பொதுச்செயலாளர் ‘கலைப்பிரியன்’ ஐ. ஏ. காதிர் கான் (மௌலவி) ஆகியோர் தமது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
அந்த அனுதாபச் செய்தியில் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
“நீர்கொழும்பு, பலகத்துறை மண்ணில் 1949 மார்ச் மாதம் 12 ஆம் திகதி பிறந்த அன்னார் மறையும்போது அவருக்கு வயது 78.
‘தினபதி’, ‘சிந்தாமணி’ போன்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய அவர், ‘தினகரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும், ‘லேக் ஹவுஸ்’ நிறுவனத்தின் ஓய்வு நிலை உத்தியோகத்தராகவும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளமான ‘நியூஸ்.எல்கே’ (news.lk) யில் பிரதம ஆசிரியராகவும் பணிபுரிந்து, தமிழ் ஊடகத்துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கியவர்.
‘தினபதி’ பத்திரிகையில் வெள்ளிக்கிழமை தோறும் வெளிவந்த ‘இஸ்லாமிய பூங்கா’ பகுதியில் பொறுப்பாசிரியராகவும் இருந்து, அந்தப் பக்கத்தை மிகத் திறமையாகவும், துல்லியமாகவும் மேற்கொண்ட பெருமையும் இவரைச் சாரும். அதன் மூலம் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய வாசகர்களின் நெஞ்சங்களில் அவர் நீங்காத இடம் பிடித்திருந்தார்.
அன்னார், கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவராகவும், அவரது இறுதி மூச்சு வரை இருந்து செயற்பட்டார்.
பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவராக இருந்து, கலை, இலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைத்து, பல நிகழ்வுகளை முன்னெடுத்த அவரது இழப்பு, நீர்கொழும்பு மண்ணிற்கு பேரிழப்பாகும்.
அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊடகத்துறையினர் அனைவருக்கும், அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன், அன்னாரின் மண்ணறை மஃபிரத்துக்காக பிரார்த்தனை புரியுமாறும், சம்மேளனம் சார்பில் ஊடக மற்றும் கலை அன்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.”
மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.ஜே.எம். தாஜுதீன் அவர்களது ஜனாஸா நாளை வெள்ளிக்கிழமை (13) காலை 10 மணிக்கு நீர்கொழும்பு, பெரியமுல்லை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாஸா வைக்கப்பட்டுள்ள இடம்: 93/40, மொஸ்க் லேன், பெரியமுல்லை, நீர்கொழும்பு.
(ஐ. ஏ. காதிர் கான்)
