உள்நாடு

நாட்டின் உண்மையான நிலைமை பற்றிய சரியான தரவுகளை மறைத்துக் கொண்டே அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கின்றது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவுத் திட்டம் குறித்து உண்மையான தரவுகளை மறைத்துக் கொண்டு, போலியான தரவுகளை உருவாக்கி தமக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொள்ளும் மோசடி மிக்க செயற்பாடொன்றையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பூர்வாங்க வரவு செலவுத் திட்டம் – 2027 தொடர்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஏற்பாடு செய்த, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வேட்பாளருக்கு 42% ஆன வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 32% ஆன வாக்குகளும் கிடைத்தன. 74% ஆன மக்கள் ஆணை புதிய IMF இணக்கப்பாடொன்றை எதிர்பார்த்தே வழங்கப்பட்டன. இதற்காகவே இவ்வாறு வாக்களித்தனர். தேர்தல்காலத்தில் ஜே.வி.பி கட்சியைப் போலவே ஐக்கிய மக்கள் கட்சியும் புதிய IMF இணக்கப்பாடொன்றை நோக்கிச் செல்வோம் என்றே கூறியது. ஆனால் அதிகாரத்திற்கு வந்த ஜே.வி.பி அந்த மக்கள் ஆணையை காலில் மிதித்து, மக்களை சிரமத்திற்கும் அழுத்தத்திற்கும் உள்ளாக்கி, ஏலவே இணக்கப்பாடு கண்ட IMF இணைக்கப்பாட்டை திருத்தாமல் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 கடந்த அரசாங்கத்தின் நவ-தாராளவாதக் கொள்கைகளைக்கூட இந்த அரசாங்கம் விஞ்சிவிட்டது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் எப்போதும் மில்லியனர்களும் பில்லியனர்களும் மாத்திரமே நன்மைகளை பெற்று வருகின்றனர். நாட்டின் தற்போதைய சவால்களை எதிர்கொண்டு அவர்களால் தியாகங்களைச் செய்ய முடியாத காரணத்தினால் IMF நிபந்தனைகளின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் EPF/ETF நிதியங்களையும் கூட சூறையாடினர். கடன் மறுசீரமைப்பின் போது வங்கித் துறைக்கு எத்தகைய நட்டமும் ஏற்படவில்லை. மூலதனப் பங்குரிமைகள் பாதுகாக்கப்பட்டு IMF இணக்கப்பாட்டின் மூலம் உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதி கொள்ளையடிக்கப்பட்டன. தற்போதைய அரசாங்கம் கடந்த அரசாங்கத்தின் நவ-தாராளவாதக் கொள்கைகளையும் விஞ்சும் வகையில், நமக்கு வேண்டாம் என்று கூறிய IMF இணக்கப்பாட்டை அச்சொட்டாக அதில் உள்ளவாறே பின்பற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

🟩 220 இலட்சம் மக்களைப் பாதுகாக்கின்ற புதிய IMF இணக்கப்பாடு அவசியம்.

எங்களது கடன் பேச்சுவார்த்தைகளை ‘லசார்ட்’ (Lazard) என்ற நிறுவனமே முன்னெடுத்தது. இலங்கையின் கடன் மட்டுமன்றி கானா மற்றும் சாம்பியாவின் கடன்களும் மறுசீரமைக்கப்பட்டன. இதன்போது நமது நாட்டிற்கு ‘மேக்ரோ லிங்க் பொண்ட்’ (Macro link bond) அதாவது நமது பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்து கடன் அதிகரிக்கும் பொறிமுறையே கிடைத்தது. இதன் பிரகாரம், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்கும் போது செலுத்த வேண்டிய கடனின் அளவும் அதிகரிக்கின்றன. அண்மையில் IMF பிரதிநிதிகள் எதிர்க்கட்சியைச் சந்தித்த சமயத்தில் மக்கள் நலன்சார்ந்த மாற்று IMF இணக்காப்பாடொன்று அவசியமெனத் தெரிவித்தது. நாட்டிற்கு தகுந்த, நாட்டைப் பாதுகாக்கும் 220 இலட்சம் மக்களுக்கு முன்னுரிமை பெற்றுத் தரும் IMF இணக்கப்பாடொன்றே அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 IMF இலக்குகளைத் தாண்டி அரசாங்கம் வரிகளை அறவிட்டுள்ளது.

IMF குறிப்பிட்ட அளவைவிட இந்த அரசாங்கம் அதிகப்படியான வரிகளை விதித்து முதன்மை உபரியை (Primary Surplus) ஈட்டிக்கொண்டது. வரிகள் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சதவீதமாக 13.9 இல் இருந்து 15.4 வரை அதிகரித்துக்கொண்டது. இந்த வரிச் சுமையைக் குறைப்பது தொடர்பான உண்மையான விஞ்ஞான பூர்வ தரவுகளை ஐக்கிய மக்கள் சக்தி இன்றும் முன்வைத்து வருகின்றது. தற்சமயத்திலும் கூட இந்த அரசாங்கம் பொய்யான தரவுகளையே முன்வைத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

🟩 நாட்டில் நபர் ஒருவரால் 17,000 ரூபாவை வைத்துக் கொண்டு வாழ்வது எங்ஙனம்?

நாட்டில் நபர் ஒருவரால் 17,000 ரூபாவை வைத்துக் கொண்டு எவ்வாறு வாழ முடியும் என்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒரு நபருக்குத் தேவையான தினசரி 2030 கிலோ கெலரி (Kilocalories) நுகர்வு அடிப்படையில் இந்தத் தொகை கணக்கிடப்படுகின்றன என்று அரசாங்கம் தெரிவித்தது. எவ்வாறாயினும், MRI நிறுவனத்தின் தரவுகளின்படி, சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு ஆணுக்கு 3340 கிலோ கெலரியும், சாதாரண ஒரு ஆணுக்கு 2340 கிலோ கெலரியும், சுறுசுறுப்பாக இயங்கும் பெண்ணுக்கு 2680 கிலோ கெலரியும், சாதாரண பெண்ணுக்கு 1890 கிலோ கெலரியும் தேவைப்படுகின்றன. இவ்வாறு பார்த்தாலும் இந்த அரசாங்கம் வறுமையை பொய்யான தரவுகளின் அடிப்படையிலேயே நிர்ணயித்து வருகின்றது. உலக வங்கியின் தரவுகளின்படி நாட்டின் கிட்டத்தட்ட 60% ஆன மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 இப்போதாவது சரியான தரவுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் வறுமை ஒழிப்புத் வேலைத்திட்டமொன்று அவசியமாகும்.

‘அஸ்வெசும’ வேலைத்திட்டம் சரியான பயனாளிகளுக்குத்தான் சென்றடைகிறதா என்பதில் சந்தேகம் காணப்படுகின்றன. சமுர்த்தி வேலைத்திட்டத்தைப் போலவே தகுதியானவர்களுக்கு நிவாரணம் கிடைக்காமலும், தகுதியற்றவர்களுக்கு நிவாரணங்கள் கிடைப்பதும் தொடர்ந்து வருகின்றன. அஸ்வெசும உதவிகளை பெற்றுக் கொடுக்கும் போது கிராம மட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவினரின் ஊடாக உரிய நபர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். வறுமையை ஒழிப்பதற்காகவாவது திருத்தப்பட்ட ‘ஜனசவிய’ போன்ற சமகாலத்திற்கு ஏற்ற முறையான வேலைத்திட்டமொன்று உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 இப்போதாவது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் புதிய முறையொன்று நாட்டிற்குத் அவசியம்.

விவசாயம், மீன்பிடி, தொழிற்றுறை, புலமைச் சமூகம் போன்ற துறைகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். இளைஞர்களுக்காகவும், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காகவும் புதியதொரு அபிவிருத்தி வங்கி அவசியமாகும். புதிய தொழில்முயற்சியாளர்கள் ஒரு மில்லியனை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்காக இந்த புதிய அபிவிருத்தி வங்கியொன்றை உருவாக்க வேண்டும். என்றாலும் அது இதுவரையில் நடந்தபாடில்லை. நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களைக் கட்டியெழுப்ப நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், நெருக்கடியில் இருக்கும் உண்மையான தொழில்முயற்சியாளர்களுக்கு அந்த நிதி கிடைத்தபாடில்லை. 2022 பொருளாதார நெருக்கடியின் காரணமாக சுமார் 250,000 நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மைகள் மூடப்பட்டுள்ளன என்றும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும்போது அரசாங்கம் உறுதியளித்த விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைக்க வேண்டும். துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருள்களை வழங்கள் வேண்டும். 12 இலட்சத்துக்கு விட்ஸ் (Vitz) ரக கார்கள் மற்றும் 50,000 ரூபாவிக்கு மோட்டார் சைக்கிள்களை பெற்றுத் தர வேண்டும். பாடசாலை உபகரணங்களுக்கான VAT வரியை நீக்குவோம் என்றனர். இது இன்னும் முன்னெடுக்கப்படவில்லை. அரசாங்கத்திற்கு இந்த விடயங்களை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார் மேலும் தெரிவித்தார்.

மறுமலர்ச்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
அரசாங்கம் சமர்ப்பித்த இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் ஆகியவற்றின் ஊடாக அரசாங்கத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை ஆராய்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் வழிகாட்டலில் oversight.lk எனும் இணையதளம் நேற்று (11) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த இணையதளத்தின் மூலம் கடந்தகால வரவு செலவுத் திட்டங்களின் முன்னேற்றம், ஒவ்வொரு அமைச்சுக்கள் தொடர்பிலான தகவல்களின் பகுப்பாய்வுகள், அரச நிறுவனங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு விசாரணைகளின் அறிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் வருமான வழிகள் மற்றும் செலவினங்கள் குறித்த பகுப்பாய்வுத் தரவுத் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *