உள்நாடு

பேருவளை மரக்கலாவத்தை தாய்சேய் நிலையம் உத்தியோகபூர்வமாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரியிடம் கையளிப்பு

பேருவளை மரக்கலாவத்தை – எகொடவத்தை வாழ் மக்களின் நலன்கருதி சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் சீனன்கோட்டை பகுதி தனவந்தர்கள் மற்றும் பொது மக்களின் நிதி உதவியுடன் பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாய்சேய் நிலையம் உத்தியோகபூர்வமாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரியிடம் கையளிக்கும் நிகழ்வு 31.10.2026 காலை நடைபெற்றது.

பயாகலை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மன்ஜுல நாகந்தல தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பேருவளை கரந்தகொட கெத்தாராம விகாரையின் விகாராதிபதி நியாகம சிரிசுமன தேரோ, பெருகமலை ஸாகிரீன் ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி எஸ்.எச்.எம். இம்ரான் (ஹுமைதி), சீனன்கோட்டை ஸகாத் கமிட்டி தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். பாகிர், பெருகமலை ஸாகிரின் குர்ஆன் மத்ரஸா பழைய மாணவர் சங்க தலைவர் அஷ்ஷெய்க் மக்கி மன்ஸூர் (நளீமி) இந்த தாய்சேய் நிலையத்தை அமைப்பதில் முன்னின்று உழைத்த எஸ்.ஐ.எம். புர்கான், முஹம்மத் ஸுபியான், அல்ஹாஜ் ஷபீக் ஷாபி, மற்றும் சிறாஸ் மர்ஸுக், குடும்ப சுகாதார சேவை அதிகாரி ஏ.பீ.ஐ. சந்தருவனி உட்பட பயாகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், பிரதேச வாழ் முக்கியஸ்தர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குடும்ப சுகாதார சேவை அதிகாரி அலுவலகமும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.

சீனன்கோட்டை ஸகாத் கமிட்டி தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். பாகிர் தமக்குச் சொந்தமான 6 பேர்சஸ் காணியை இதற்காக அன்பிளப்புச் செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் உரை நிகழ்த்திய பேருவளை கரந்தகொட கெத்தாராம விகாரையின் விகாராதிபதி நியாகம சிரிசுமன தேரோ கூறியதாவது பேருவளை மரக்கலாவத்த மற்றும் கரந்தகொட பகுதியில் நிழவிவந்த தாய்சேய் மத்திய நிலையம் இல்லாக் குறையை இவ்வூர் பரோபகாரிகள், பொதுமக்கள் இணைந்து மிக அழகான முறையில் அமைத்து அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. இது இப்பகுதிக்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்கும் ஓர் முன்மாதிரியாகும். இந்த நிலையத்தினூடாக பிரதேச சிங்கள-முஸ்லிம் மக்கள் சேவையை பெற்றுக் கொள்வார்கள். இதில் எந்த வேற்றுமையும் கிடையாது. இதற்காக காணி அன்பளிப்புச் செய்த பாக்கிர் ஹாஜியார் மற்றும் நிதி உதவி வழங்கிய பரோபகாரிகள் இக்கட்டிடத்தை பூர்த்தி செய்ய உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

பிரபல சமூக சேவையாளர் எஸ்.ஐ.எம். புர்கான் இங்கு உரையாற்றும் போது கூறியதாவது நீண்ட காலமாக மக்கள் அனுபவித்து வந்த முக்கிய பிரச்சினை ஒன்று இந்த நிலையம் அமைக்கப்பட்டதன் ஊடாக தீர்த்து வைக்கப்படுகிறது. இந்த நிலையத்தில் தாய்சேய் நிலையம், கிராம சேவா அதிகாரி அலுவலகம், சமுர்த்தி அதிகாரி அலுவலகம், அபிவிருத்தி அதிகாரி அலுவலகம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையத்தை மிக அழகான முறையில் நிர்மாணிக்க பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த நிலையத்திற்கு ஏதாவது உபகரணங்கள் மற்றும் தேவைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றினையும் எமது பகுதி பரோபகாரிகளின் நிதியுதவியுடன் பூர்த்தி செய்து கொடுக்க நாம் என்றும் தயாராக இருக்கின்றோம்.

பயாகலை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மன்ஜுல நாகந்தல உரையாற்றும் போது பயாகலை மற்றும் பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள மிக அழகான, விசாலமான அனைத்து வசதிகளையும் கொண்ட தாய்சேய் நிலையமாக இந்த தாய்சேய் நிலையத்தை குறிப்பிடலாம். இந்த நிலையத்தை அமைத்துக் கொடுத்த இவ்வூர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *