ஆபத்தின் விளிம்பில் நாத்தாண்டி ரத்மல்ஓயா பாலம் அதிகாரிகள் அவசரமாக கவனம் செலுத்த வேண்டும்
கால்தடங்களையும் வாகனங்களையும் சுமந்து நின்ற அந்தப் பாலம், இன்று தன் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதோ என்ற அச்சம் நாத்தண்டிய பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. எந்நேரமும் சரிந்து விழலாம் என்ற ஆபத்தான சூழலில், ரத்மல்ஓயா பாலம் தற்போது மரணப் பொறியாக மாறியுள்ளது.
நீண்ட காலமாகவே பராமரிப்பின்றி பலவீனமடைந்திருந்த நாத்தாண்டி ரத்மல்ஓயா எனும் வரலாற்றுப் பழமை வாய்ந்த பாலம், அண்மைக்காலமாகப் பெய்துவரும் கனமழையால் ரத்மல்ஓயாவில் ஏற்பட்டுள்ள திடீர் நீர் பெருக்கத்தைத் தாங்க முடியாமல் நிலைகுலைந்து போயுள்ளது. பாலத்தின் இருபுறமும் இருந்த பாதுகாப்புக் கைப்பிடிகள் எப்போதோ உடைந்து நொருங்கிவிட்ட நிலையில், இதுவரை எவ்வித புனரமைப்புப் பணிகளும் இடம்பெறவில்லை.
ஆனால், உண்மையான பேராபத்து இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது. பாலத்தின் அத்திவாரத்தைத் தாங்கி நிற்கும் இருமருங்கு கரைகளும் வெள்ள நீரில் தீவிரமாக அரிக்கப்பட்டு வருகின்றன. ஆற்றின் கரை மெல்ல மெல்ல சரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து பதறிப்போன கிராம மக்கள், தாமே களத்தில் இறங்கி மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக தடுப்புச் சுவர்களை அமைத்துள்ளனர். எனினும், ஆற்றில் திடீரென பெருவெள்ளம் பாய்ந்தால் இந்த மணல் மூடைகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்பதே அப்பகுதி மக்களின் பயமாக உள்ளது.
கரைகள் உள்வாங்குவதால் பிரதான வீதியிலிருந்து விளை நிலங்களுக்குச் செல்லும் பாதையும் தற்போது வெள்ள நீரில் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. உழைக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதையும் கண்முன்னே பறிபோய்க் கொண்டிருக்கின்றது.
ஒருவேளை இந்தப் பாலம் உடைந்து விழுமானால், நாத்தண்டியவிலிருந்து நாரவில வரையான போக்குவரத்து முற்றாகத் தடைப்படுவதுடன், அதனை அண்டியுள்ள பல கிராமங்கள் வெளியுலகத் தொடர்புகளை இழந்து தனிமைப்படும் அவலநிலை உருவாகும். பெரும் அனர்த்தம் ஒன்று நிகழும் வரை காத்திருக்காமல், அதிகாரிகள் உடனடியாகக் கண்விழித்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதே இப்பகுதி மக்களின் தற்போதைய ஒரே கேள்வியாகும்.


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
