அமுத விழா கொண்டாட இருக்கும் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம்

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்வுகள் எதிர்வரும் ஒக்டோபர் 27, 28, 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளன.
“கல்வியில் சிறந்து விளங்கும் 80 ஆண்டுகள்” (80 Years of Excellence in Education) என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகள், அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC), பழைய மாணவியர் சங்கம் (OGA) மற்றும் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்போது புத்தகக் கண்காட்சி, கலைக் கண்காட்சி, இசை நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஒக்டோபர் 27ஆம் திகதி பாடசாலை மாணவர்களுக்கான புத்தகக் கண்காட்சியும், மாலை 2 மணி முதல் 5 மணி வரை பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கான புத்தக கண்காட்சியும் நடைபெறும்.
28ஆம் திகதி காலை பாடசாலை மாணவர்களுக்கான கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுவதுடன், மாலை பெண்களுக்கான கண்காட்சி மற்றும் Concert நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 29ஆம் திகதி காலை ஏனைய பாடசாலை மாணவிகளுக்கான கண்காட்சி மற்றும் Concert நிகழ்ச்சிகளும், மாலை பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கான Concert நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்விரு நாட்களின் மாலை நிகழ்வுகளிலும் பெண்கள் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்.
ஒக்டோபர் 30ஆம் திகதி மாணவர்களின் நூல் வெளியீடு மற்றும் ஆண்டு நிறைவு நினைவு நிகழ்வுகள் காலை வேளையில் நடைபெறவுள்ளதுடன், மாலை ஆண்களுக்கான கண்காட்சியும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுகள் அனைத்தும் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய வளாகத்தில் நடைபெறவுள்ளன.
பாடசாலையின் 80 ஆண்டுகால கல்விப் பாரம்பரியத்தையும் சாதனைகளையும் கொண்டாடும் இவ்விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

