இங்கிலாந்துக்கு எதிராக சாதனை வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை
பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் முத்தரப்புத் தொடரின் (ODI Tri-Series) 3ஆவது போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை 49.5 ஓவர்களில் 8 விளையாட்டுகளை மாத்திரம் இழந்து கடந்த இலங்கை அணி அபாரமான சாதனை வெற்றியைப் பதிவு செய்தது.
பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய 3அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்களைக் குவித்தது. இங்கிலாந்து அணியின் தலைவரான ஹரி புரூக் 116 பந்துகளில் 202 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
மேலும் ஜோ ரூட் 66 பந்துகளில் 69 ஓட்டங்களையும், வில் ஜாக்ஸ் 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் பெற்றனர். டொம் பென்டன் 51 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அசித பெர்னாண்டோ ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இலங்கையின் அதிரடியான பதிலடி!
பின்னர் இங்கிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 430 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே வெற்றிக்காகப் போராடியது. இலங்கை அணியின் வெற்றிக்கு பவன் ரத்நாயக்க, தசுன் ஷானக்க, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் முக்கிய பங்களிப்பை வழங்கினர்.
பவன் ரத்நாயக்க 106 பந்துகளில் 130 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளமிட்டார். தசுன் ஷானக்க 50 பந்துகளில் 97 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்தார். அவிஷ்க பெர்னாண்டோ 83 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், இறுதிவரை அணியின் வெற்றிக்காகப் போராடி 49ஆவது ஓவரின் 5 ஆவது பந்தில் லோங் ஓப் திசையில் சிக்சர் ஒன்றை பறக்கவிட்டு வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்த ஜனித் லியனகே 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் வெற்றிப் பயணத்தில் முக்கிய பங்காற்றினார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜோஷ் டங் 79 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியானது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ஒட்டங்களை இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணி பெற்றுக் கொண்ட இரண்டாவது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா அணி நிர்ணயித்த 435 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி கடந்தமை முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)
