அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்தது குறித்து கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கான மரண தண்டனையை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம், 13 ஒக்டோபர் 2026 அன்று இரத்துச் செய்துள்ளது.
அனோஜன் சிவராசாவின் விடயத்தில் சாதகமான தீர்ப்பைப் பெறுவதற்காக, இலங்கை அரசு மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட முயற்சிகளுக்குக் கிடைத்த முக்கிய வெற்றியாக இது அமைந்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு இன்று (14) புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
“இந்தத் தீர்ப்பு அனோஜன் சிவராசாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட சட்டக் குழுக்களின் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளைத் தொடர்ந்து, ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றத்தை இது பிரதிபலிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத்தின் ஒருங்கிணைப்பில், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக, இலங்கை மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழுவின் கூட்டு முயற்சியினால் இந்த மேன் முறையீடு (11) ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அடங்கிய இந்தக் குழுவில் இலங்கை சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும, மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவவி, ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதியான நீதிபதி எம்.டி. மொஹமட், சட்டத்தரணி ஃபாரிஸ் ஃபஸால் அப்துல் ஹஃபீல் மொஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மொஹமட் ரியாஸ்தீன் சில்மி ஆகியோர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
