உள்நாடு

சம்மாந்துறையில் உணவு உள்ளிட்ட வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட வியாபாரிகளுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு, நேற்று (13) சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், உணவக உரிமையாளர்கள்,மருந்தக உரிமையாளர்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், புலனாய்வு உத்தியோகத்தர் Z.M. ஸாஜீத் பிரதான வளவாளராகக் கலந்துகொண்டு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான வர்த்தக நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

இதன்போது, நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம், பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்துதல், பற்றுச்சீட்டு வழங்குதல், பொருட்களின் லேபிள்கள் மற்றும் காலாவதித் திகதிகள் தொடர்பான விதிமுறைகள், சரியான நிறை மற்றும் அளவு முறைகள், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிர்த்தல், உணவுப் பொருட்களின் தரம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் முறையான சேமிப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விளக்கக் காட்சிகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டன.

நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், வியாபாரிகள் நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகப் பொறுப்புடனும் நியாயமான முறையிலும் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் மூத்த புலனாய்வு உத்தியோகத்தர் M.M.M. பஸ்மீர், A.P.M. றிப்சாத் மற்றும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

(தில்சாத் பர்வீஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *