அனோஜன் மீதான மரண தண்டனை; இரத்துச் செய்தது சவூதி உச்ச நீதிமன்றம்
இலங்கையர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாக இலங்கைப் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அறிவித்துள்ளார்.
2026 ஒக்டோபர் 13ஆம் திகதி மரண தண்டனை விதித்த தீர்ப்பை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாகப் பிரதி அமைச்சர் தனது சமூக ஊடகப் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது அனோஜன் சிவராசாவுக்கு பெரும் நிம்மதியளிக்கும் செய்தி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டத்தரணிகள் குழுவினருக்கும் அவர்களின் முயற்சிகளுக்காக நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அனோஜன் சிவராசாவின் சட்ட விவகாரத்தில் இந்த அறிவிப்பு ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
எனினும், அவரது தற்போதைய சட்ட நிலை மற்றும் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
