உள்நாடு

புத்தளம் சாஹிரா கல்லூரியின் நீண்ட கால கனவாக இருந்த “பஸ்” கனவு நனவாகிறது.

புத்தளம் சாஹிரா கல்லூரியின் வரலாற்றில், ஒரு நீண்டகால கனவாக இருந்து வந்த ஒரு முக்கிய தேவையாக கருதப்பட்டது
தமக்கு சொந்தமாக ஒரு பஸ்ஸினை பெற்றுக்கொள்வதாகும்.

பல்வேறு கால கட்டங்களில் பலர் ஆர்வத்தோடு இதற்காக முயற்சித்த போதும் கால சூழல் காரணிகளால் அது கைகூடியிருக்கவில்லை.

இந்நிலையில், சாஹிராவின் பழைய மாணவர் அணிகளில் ஒன்றான “பவர் 90” (1990 சாதாரண தரம் /1993 உயர்தரம்) அமைப்பு, தமது 2026 வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஏனைய பழைய மாணவர் அணிகள் மற்றும் பாடசாலை சமூகத்தின் அனைத்து அங்கங்களையும் ஒன்றிணைத்து செய்த முயற்சியின் விளைவாக இந்தக் கனவு தற்போது நனவாகி இருக்கிறது.

கடந்த பெப்ரவரி 2026 முதல் ‘BUS FOR MY ZAHIRA’ என்ற மகுடத்தில் சுமார் எட்டு மாதங்கள், “பவர் 90” அணித்தலைவர் கவிஞர் புத்தளம் எஸ்.ஏ.சீ.பீ. மரிக்கார் தலைமையில், கல்லூரி அதிபர், பழைய மாணவர் அமைப்பு மற்றும் ஏனைய கூட்டமைப்புகள் செய்த தொடர் முயற்சியின் விளைவாக, 2 கோடி ரூபா பெறுமதியான இந்த செயல் திட்டம் சாத்தியமாகியுள்ளது.

இம்மாதம் 16 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 03 மணியளவில் வாகனத் தொடர் பேரணி, அதனோடு இணைந்து 05 மணியளவில் பஸ் கையளிப்பு விழா என்பவற்றை, கல்லூரி அதிபர், பாடசாலை முகாமைத்துவ குழு, பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து “பவர் 90” அணி கல்லூரி வளாகத்தில் வெகுவிமரிசையாக ஏற்பாடு செய்துள்ளது.

கல்லூரி அதிபர் ஐ.ஏ. நஜீம் தலைமையில் நிகழவுள்ள இவ்விழாவில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக, எம்.ஜே.எம். பைசல், புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹமட் உட்பட இன்னும்பல பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *