உள்நாடு

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் ஆறு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த வழக்கு, இன்று (12) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதில் நீதவான் எக்ஸ். எச்.விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், ஊடகவியலாளர் யூ.எல். மப்ரூக், மிப்ளால் மௌலவி ஆகிய பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, சிபான் மஹரூப், சாரிக் காரியப்பர், எம். வை. அன்வர் சியாத், ஆரிகா காரியப்பர், ஏ.எல்.எம். றிபாஸ், துல்ஹர் நயீன் துல்சன், எம்.ஏ. அன்சில் மற்றும் பீ.எம்.றசீன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், நிகல்நிலை காப்புச்சட்டத்தின் கீழ் இவ்வழக்கினை விசாரிப்பதற்கான மன்றின் நியாயாதிக்கம் தொடர்பிலான ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டது. இந்த ஆட்சேபனைகளை அடுத்து குறித்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

வழக்காளி டாக்டர் கு. சுகுணன் சார்பில் சட்டத்தரணி லக்சான் டயஸ் தலைமையிலான சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *