இஸ்லாம் பாடவிதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்றங்கள், திருத்தப்பட வேண்டிய விடயங்கள்தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் விசேட கலந்துரையாடல்

இஸ்லாம் பாடவிதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்றங்கள், திருத்தப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் எதிர்காலத்தில் புதிதாக வெளியிடப்படவுள்ள பாடப்புத்தகங்கள், அனைத்து இஸ்லாமிய மாணவர்களும் பொதுவாகக் கற்கக்கூடிய வகையில் ஒருமித்ததும் பொதுவானதுமான பாடத்திட்ட அடிப்படையில் அமைய வேண்டியதன் அவசியம் தொடர்பாக, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஓ.ஜீ. தயாரத்ன பண்டா (NIE) Senior Professor O. G. Dayaratna Banda அவர்களுடன் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள், புத்திஜீவிகள் குழுவினர் சந்தித்து நீண்ட நேரம் விரிவான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.
இதன்போது இஸ்லாம் பாடவிதானத்தின் தற்போதைய நிலை, மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், எதிர்கால கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமாகக் கலந்துரையாடப்பட்டதுடன், பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹசன் (நளீமி), கொழும்பு மஹ்மூதியா அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி சீ.ஐ.எம். அஸ்மிர் (ஹசனி), கஹட்டோவிட்ட முஅஸ்கர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி பணிப்பாளர், மௌலவி எம்.என்.எம். இக்ராம் (அல் பாசி), கொழும்பு குல்லிய்யது அஜ்வாத் அல்ஃபாசி அரபுக் கல்லூரி அதிபர்
கலிஃபதுஷ் ஷாதுலி அஹ்மத் சூஃபி மஹ்ழரி ,
மௌலவி அஹமட் சஹீல் (அல் அஸ்ஹரி – காதிரி), முன்னாள் ஜித்தாவுக்கான கவுன்சலர் அஸ்ஸய்யித் பலாஹ் மௌலானா, முன்னாள் ஆளுனர் அலவி மௌலானாவின் புதல்வர் அஸ்ஸெய்யித் நகீப் மௌலானா, ஆகியோர் பங்கு பற்றினர்.
பேருவளை பீ.எம். முக்தார்
