உள்நாடு

அரச சொத்துக்களை சேதப்படுத்துவது முழு நாட்டுக்குமே பேரிழப்பு; மெட்ரோ பஸ்கள் மீதான தாக்குதலுக்கு பைஸர் முஸ்தபா கண்டனம்

“அரச சொத்து என்பது ஒருபோதும் தனிப்பட்ட ஒருவரின் உடைமை அல்ல. அது முழு பொது மக்களின் வரிப்பணத்தில் பராமரிக்கப்படும் பொதுச் சொத்து. அவற்றை துஷ்பிரயோகம் செய்வதும் சேதப்படுத்த முயற்சிப்பதும் மிகவும் கவலைக்குரிய விடயம்” என, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற மெட்ரோ பஸ்கள் (Metro Buses) மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“அரச சொத்து என்பது ஒருபோதும் தனிப்பட்ட விடயம் அல்ல. அது இந்த நாட்டு பொது மக்களின் சொத்து. மெட்ரோ பஸ் போன்ற பொதுப் போக்குவரத்துச் சேவைகளை சேதப்படுத்துவதால், இறுதியில் பாதிக்கப்படுவது சாதாரண பொது மக்கள்தான். தற்போது நடந்துள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் நான் மிகவும் கவலைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

எதிர்கால சந்ததியினருக்காக அரச சொத்துக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா, நாளை நாட்டைப் பொறுப்பேற்கவுள்ள பிள்ளைகளுக்காக இந்த வளங்களைப் பாதுகாத்து வைப்பது அனைத்து மக்களினதும் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

“எமது எதிர்கால பிள்ளைகள் மற்றும் அடுத்த தலைமுறையினரின் நன்மைக்காக, இந்த அரச சொத்துக்களை மிகவும் பாதுகாப்பாகப் பாதுகாத்து வைப்பது எமது பொறுப்பாகும். எனவே, இது போன்ற அழிவுச் செயல்களிலிருந்து விலகி, தேசிய சொத்துக்களைப் பாதுகாக்க மிகப்பொறுப்புடன் செயல்படுமாறு, நான் அனைத்து மக்களிடமும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றும், பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *