சிறைச்சாலையில் அனோஜன் சிவராசாவைச் சந்தித்தார் இலங்கைத் தூதுவர்

சவூதி அரேபியாவின் டம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் 8ஆம் திகதி வியாழக்கிழமை சந்தித்து, அவரது உடல்நிலை மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்திலிருந்து சுமார் 450 கிலோமீற்றர் தொலைவில் டம்மாம் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது.
சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த 27 வயதுடைய இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசா, சமூக ஊடகத்தில் இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவமதிப்பதாகக் கருதப்பட்ட கருத்தொன்றைப் பதிவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். குறித்த பதிவுடன் தொடர்புடைய வழக்கில் அவர் தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவருக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிறைச்சாலைக்குச் சென்ற இலங்கைத் தூதுவர், சிவராசாவுடன் கலந்துரையாடி, அவரது தேவைகள் மற்றும் கவலைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அவருக்குத் தேவையான தூதரக மற்றும் சட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதாகவும் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், அனோஜன் சிவராசா நேரடியாகத் தொடர்புகொள்வதற்கு வசதியாகத் தனது தொடர்பு விபரங்களையும் தூதுவர் அவரிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த தூதுவர் அமீர் அஜ்வாட், அனோஜன் சிவராசா நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவரது நலனில் சவூதி சிறைச்சாலை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, டம்மாம் மத்திய சிறைச்சாலையின் பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை மருத்துவர் ஆகியோரையும் தூதுவர் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கும், அனோஜன் சிவராசாவுக்குத் தேவையான பராமரிப்புகளை வழங்கி வருவதற்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் மேன்முறையீட்டுச் செயற்பாடுகளுக்கும் இலங்கைத் தூதரகம் உதவி வழங்கி வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனோஜன் சிவராசாவுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளுடன், அவருக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதில் இலங்கைத் தூதரகம் கவனம் செலுத்தி வருகின்றது.
