சர்வதேச இளம் தலைவர்கள் பயிற்சியில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான்

இந்திய அரசின் ஏற்பாட்டில், இந்தியாவின் நொய்டாவில் அமைந்துள்ள National Institute of Entrepreneurship and Small Business Development (NIESBUD) நிறுவனத்தில் நடைபெற்ற சர்வதேச இளம் தலைவர்கள் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான், பயிற்சி நிகழ்வுகளை நிறைவுசெய்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.
2026 செப்டெம்பர் 21 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த சர்வதேச பயிற்சி செயல் அமர்வில், அமீர் அப்னானின் பெயர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுத்தீன் மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களால் ஏகமனதாக முன்மொழியப்பட்டிருந்தது.
இளம் தலைவர்களின் தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்துதல், புதுமையான சிந்தனைகளை வளர்த்தல், தொழில்முனைவுத் திறன்களை ஊக்குவித்தல், அமைப்பு வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகள் தொடர்பில் இப்பயிற்சியில் விரிவான அறிவுப் பகிர்வுகளும் செயன்முறை அமர்வுகளும் இடம்பெற்றன.
குறிப்பாக, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், அவற்றின் ஊடாக பொதுமக்கள் பெற்றுவரும் நன்மைகள் மற்றும் அவ்வாறான சிறந்த நடைமுறைகளை ஏனைய நாடுகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் பயிற்சியின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இது வெறுமனே ஒரு பயிற்சி நிகழ்வாக அமைந்திருக்காமல், உள்ளூராட்சி நிர்வாகத்தை மேலும் மக்கள் மையப்படுத்துவதற்கும், இளைஞர்களை சமூக அபிவிருத்திப் பணிகளில் அர்த்தமுள்ள வகையில் இணைத்துக்கொள்வதற்கும் வழிகாட்டும் ஒரு முன்மாதிரியான செயற்பாடாக அமைந்ததாக அமீர் அப்னான் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயிற்சியின் மூலம் பெற்றுக்கொண்ட அறிவு, அனுபவம் மற்றும் புதிய சிந்தனைகளை தான் பிரதிநிதித்துவப்படுத்தும் சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் பகிர்ந்துகொண்டு, அவற்றை நடைமுறை ரீதியாக சமூக நலனுக்குப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளம் தலைவராக சமூகத்தின் எதிர்கால தேவைகளை அடையாளம் கண்டு, அதற்கேற்ற புதிய சிந்தனைகளுடன் செயற்படக்கூடிய ஆற்றல் கொண்டவராக அமீர் அப்னான் இவ்வாறான சர்வதேச பயிற்சி நிகழ்வில் பங்கேற்றிருப்பது, கிழக்கு மாகாணத்தில் இளைஞர் தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
உள்ளூராட்சி மட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதுடன், சமூக அமைப்புகள், இளைஞர் குழுக்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து பிரதேச அபிவிருத்திக்கு புதிய அணுகுமுறைகளை உருவாக்குவதற்கும் இந்த சர்வதேச அனுபவம் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னை இந்த சர்வதேச இளம் தலைவர்கள் பயிற்சி செயல் அமர்வுக்காக தெரிவுசெய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் ரிஷாத் பதியுத்தீன், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும், அத்துடன் இப்பயிற்சிக்கான வாய்ப்பை வழங்கிய இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கும் அமீர் அப்னான் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அனுபவத்தையும் புதிய அறிவையும் தாயக சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அமீர் அப்னான் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம், சம்மாந்துறை மட்டுமன்றி கிழக்கு மாகாண இளைஞர்களின் தலைமைத்துவ வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா – இந்தியா
