இஸ்லாம் பாடத்திட்ட மேம்பாடு தொடர்பில்ஜம்இய்யதுல் உலமாவுடனும் முஸ்லிம் சமய கலாச்சார பணிப்பாளருடனும் முக்கிய சந்திப்பு
இஸ்லாம் பாடத்திட்டத்தின் மேம்பாட்டையும் இளைய தலைமுறையினர் தவறான சிந்தனைகளால் வழிநடத்தப்படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடனும் முஸ்லிம் சமய கலாச்சார பணிப்பாளருடனும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று (30.09.2026) புதன்கிழமை இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை காரியாலயத்தில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மற்றும் முக்கிய உறுப்பினர்களுடனான இந்த சந்திப்பில் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் இணைச் செயலாளரும் கலீபதுஷ் ஷாதுலியுமான அஷ்ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹசன் (நளீமி), கொழும்பு மஹ்மூதியா அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி சீ.ஐ.எம். அஸ்மிர் (ஹசனி), கொழும்பு அஜ்வாத் அல் பாசி அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி அஹமட் சூபி (மஹ்லரி), கஹட்டோவிட்ட முஅஸ்கர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி எம்.என்.எம். இக்ராம் (அல் பாசி), மௌலவி அஹமட் சஹீல் (அல் அஸ்ஹரி-காதிரி) ஜித்தாவிற்கான இலங்கையின் முன்னாள் கொன்சியூலர் அஸ்ஸயித் பலாஹ் மௌலானா மற்றும் இஸ்லாமிய ஆன்மீக செயற்பட்டாளாரான அஸ்ஸய்யித் நகீப் மௌலான உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் அதன் பணிப்பாளர் முஹம்மத் நவாஸுடனும் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில், தவ்ஹீதின் பெயரால் போதிக்கப்படும் தவறான மூடநம்பிக்கைகளைத் தவிர்த்து, உண்மையான ஏகத்துவக் கொள்கைகளையும் ஆதாரப்பூர்வமான இஸ்லாமிய போதனைகளையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது என மௌலவி சீ.ஐ.எம். அஸ்மிர் (ஹசனி) தெரிவித்தார்.
மேலும், அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் கற்கக்கூடியதும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான பொதுவான இஸ்லாம் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டுமெனக் கோரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எதிர்காலத் தலைமுறையினருக்கு சரியான மார்க்க அறிவை வழங்கி, சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் வகையில் இஸ்லாம் பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்து தேவையான மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எமது இளைய தலைமுறையினரின் மார்க்க அறிவையும், முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையையும் பாதுகாப்பதே இம்முயற்சியின் உயரிய நோக்கமாகும் என மௌலவி அஸ்மிர் (ஹசனி) மேலும் தெரிவித்தார்.




(பேருவலை பீ.எம்.முக்தார்)
