உள்நாடு

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச விளையாட்டுமைதானங்கள் கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்யப்படும் – விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே அறிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்களை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதோடு அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படும் என்று இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

அம்பாறை, அட்டாளைச்சேனை, பொத்துவில்-பசறிச்சேனை, ஒலுவில், தீகவாபி, பாலமுனை, தெஹியத்தகண்டிய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் பங்குபற்றிய இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்களை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதுடன் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவிப்பு

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் திரு. சுனில் குமார கமகே தலைமையில் 25ல் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை உரையாற்றுகையில், அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய 05 விளையாட்டு மைதானங்கள் குறித்த முன்மொழிவுகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளேன்.

இம்மாவட்டத்தில் 400 மீற்றர் விளையாட்டு மைதானங்களாக அம்பாறை, அட்டாளைச்சேனை மற்றும் தெஹியத்தகண்டி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளன. அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள 400 மீற்றர் விளையாட்டு மைதானம் கரையோர பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரேயொரு விளையாட்டு மைதானமாகும்.
விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பான எனது முன்மொழிவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிபாரிசு செய்து அறிக்கை சமர்ப்பித்த போதும் அமைச்சின் செயலாளர் இந்த வருடம் நிதி ஒதுக்கப்படவில்லை என எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சரான தாங்கள் அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள 400 மீற்றர் விளையாட்டு மைதானத்திற்கு அண்மையில் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேரடியாக பார்வையிட்டும் உள்ளீர்கள். எனவே, அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு 400 மீற்றர் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திக்கு அடுத்த வருடமாவது முன்னுரிமை வழங்க வேண்டும்.

பொத்துவில்-பசறிச்சேனையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தினையும், பார்வையாளர் அரங்கினையும் உள்ளூர் விளையாட்டு வீரர்கள் பாவித்து வந்ததுடன், பொத்துவில் பிரதேசத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு உல்லாச பிரியாணிகளும் இவ்விளையாட்டு மைதானத்தை பாவித்து வந்தனர். அண்மையில் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் பார்வையாளர் அரங்கு சேதமடைந்துள்ளது. எனவே பொத்துவில்-பசறிச்சேனை விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒலுவில், தீகவாபி பிரதேசங்களில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

பாலமுனை ரக்பி விளையாட்டு மைதானம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். 2024 இல் பாலமுனை மின்ஹாஜ் தேசிய பாடசாலை ரக்பி விளையாட்டில் மாகாண சம்பியனாகவும் 2023-2025 இல் பாலமுனை ட்ரை ஸ்டார் விளையாட்டுக் கழகம் மாகாண அளவில் முதலிலும் இடம்பெற்று பல தடவைகள் 07 தடவைகள் தேசியத்திற்கும் தெரிவாகி சாதனை படைத்துள்ளன. இவ்வீரர்களுக்கு பயிற்சி பெற உரிய மைதானம் இல்லாத நிலையில் கிரவலினால் அமைக்கப்பட்ட மைதானத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் இருந்து கந்தளாய் லீலா ரத்ன விளையாட்டு மைதானத்திற்கு சென்று தங்களின் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். எனவே பாலமுனை ரக்பி விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.

நிந்தவூர் பிரதேசத்தில் கபடி விளையாட்டில் மதீனா விளையாட்டுக் கழகம் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் பல சாதனைகளை பெற்றுள்ளது. நிந்தவூர் பிரதேச கபடி விளையாட்டு வீரர்களுக்கான கபடி உள்ளக விளையாட்டு அரங்கு இல்லாமலும் விளையாட்டு உபகரணங்கள் இல்லாததனால் கபடி விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்ப்பதில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே எமது அம்பாறை மாவட்டத்தில் மிக முக்கியமான 05 முன்மொழிவுகளை அமைச்சு கவனம் எடுத்து அபிவிருத்தி செய்ய வேண்டும் என எமது அம்பாறை மாவட்ட இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர் சுனில் குமார கமகே, அம்பாறை மாவட்டத்தில் அடுத்த வருடம் அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதாக வாக்குறுதி வழங்கி விட்டதாகவும், அடுத்த கட்டமாக அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பொத்துவில் – பசறிச்சேனை, ஒலுவில், தீகவாபி, பாலமுனை ரக்பி மற்றும் நிந்தவூர் கபடி மைதானங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு முடிந்தளவு முன்னுரிமை வழங்கி கட்டம் கட்டமாக விளையாட்டு மைதான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *