சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுதாய வலுவூட்டலுக்கான ‘புதிய சக்தி தேசிய வேலை திட்டம்’ முன்னெடுப்பு
சமுதாய வலுவூட்டல் தொடர்பான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் ஒன்றுகூடல் மாநாடு ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று (30) மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகல அவர்களின் வழிகாட்டலின் கீழ் அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சுப்ரமணியம் கரண் தலைமையில் கிழக்கு மாகாணம் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான தெளிவூட்டல் மாநாடாக இது அமைந்தது.
சமுர்த்தி திணைக்களத்தின் எதிர்கால செயற்பாடுகள், வளர்ச்சி, அடுத்த வருட இறுதிக்குள் இரண்டு இலட்சம் குடும்பங்களை வலுவூட்டல், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தல், ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்களுக்குச் சிறந்த இலக்கு சார்ந்த வருமானம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புக்களை வழங்குதல் மற்றும் இளைஞர்கள் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு பயிற்சி வழிகாட்டல்களுக்கான நிதி, ஒன்றரை இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரை அதிகரிக்கப்படும் போன்ற விடயங்களை தெரிவித்து சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் விரிவுரை இடம்பெற்றது. இதற்காக சகல உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மற்றும் செயல்பாடு மிக அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும் இந்நிகழ்வில் கலாச்சார நடனங்கள் இடம்பெற்றதுடன் அதிதிகளின் உரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கல விக்கிரமாராச்சி, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்கள், சமுர்த்தி தலைமைக் காரியாலய அதிகாரிகள், மாவட்ட சமுர்த்தி காரியாலய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
















(ஏ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம் செய்தியாளர்)
