உள்நாடு

அமுத விழா காணும் கல்பிட்டி அல் அக்ஸாவில் இன்று கல்விக் கண்காட்சி ஆரம்பம்

கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கண்காட்சி உலக சிறுவர் தினமான இன்று ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி நாளை 2ஆம் திகதி மற்றும் நாளை மறுதினம் 3ஆம் திகதி ஆகிய 3 நாட்கள் பாடசாலையில் இடம்பெறுகிறது.

கடந்த 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை இந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் தனது 80ஆவது ஆண்டு நிறைவான அமுத விழாவினை மிக விமர்சையாக பாடசாலையின் அதிபர் U.M.M. அமீர் தலைமையில் கொண்டாட பாடசாலை சமூகத்தின் பூரண ஒத்துழைப்புடன் தயாராகிவருகின்றது.

அதற்கமைய இவ் அமுத விழா கொண்டாட்டத்தில் பாடசாலை வளாகத்துக்குள் உட்கட்டுமான நடவடிக்கைகளை மேம்படுத்தல், தரமான சஞ்சிகை ஒன்று வெளியிடல், ஆரம்பப் பிரிவு கண்காட்சி, பாடசாலையின் ஸ்தாபகர்கள் மற்றும் முன்னாள் அதிபர்கள் புகைப்படங்களை பிரதான மண்டபத்தில் காட்சிப்படுத்தல், கலைவிழா, நடை பவனி, பழைய மாணவர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள், கெளரவிப்பு நிகழ்வு, மரம் நடுகை, சுவடிக்கூடம் நிறுவல் போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் உலக சிறுவர் தினமான இன்று அல் அக்ஸா தேசிய பாடசாலையில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் ஆக்கங்களும், சித்திரம், விஞ்ஞான ஆய்வு கூட செயற்பாடுகளும், தொழில்நுட்ப பிரிவு ஆக்கங்களும், கணித செயற்பாட்டு ஆக்கங்களும் மற்றும் இன்னும் பல வினோத நிகழ்வுகளும் கண்ணை கவரும் வகையில் மகிழ்விக்கக் இருக்கின்றது.

மேலும் இக் கண்காட்சியானது ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு மட்டுமல்லாது இடைநிலை மாணவர்களுக்கும், உயர்தர மாணவர்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் அமைவதோடு சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கண்டுகளிக்க கூடிய வகையிலும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வானது அமுதவிழா காணவிருக்கும் பாடசாலையின் பெருமையையும், புகழையும் வெளி உலகிற்கு வெளிக்கொணரும் வகையில் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *