ஊடகவியலாளர் ஐ.ஏ. காதிர் கானுக்கு ‘சிரேஷ்ட ஊடகவியலாளர்/எழுத்தாளர் விருது’!

‘தினச்சுடர் தேசிய விருது’ வழங்கும் நிகழ்வில் கமர்ஜான் பீபி, ஜென்னத்துல் பாத்திமா, ஷிபானியா பௌசுல், ரிஹானா ஹரிஸ்கான், நிஸ்வத்துல் பாத்திமா, குத்சியா, சுபியானி, சிஹாமா, சிவயோகினி ஆகிய பன்முக ஆளுமைகளும் கௌரவிக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘தினச்சுடர் தேசிய விருது’ வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில், இலங்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 46 பன்முக ஆளுமைகள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கொழும்பு பொது நூலக மண்டபத்தில், (17) வியாழக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில், ஊடகவியலாளர் ஐ.ஏ. காதிர் கான், ‘சிரேஷ்ட ஊடகவியலாளர்/எழுத்தாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
‘தினச்சுடர்’ பத்திரிகையின் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான ஏ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான முஜிபுர் ரஹுமான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
திரைப்பட இயக்குநரும் நடிகருமான திருவாய் மொழி கேசவன் மற்றும் கலைஞர் குணசேகரன் உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஹுணுப்பிட்டிய கமர்ஜான் பீபி (சிரேஷ்ட எழுத்தாளர்), அடுலுகம ஜென்னத்துல் பாத்திமா (செயற்பாட்டு சமூக சேவையாளர்), நேகம ஷிபானியா பௌசுல் (வளரும் கலைமாமணி), தெல்தோட்டை ரிஹானா ஹரிஸ்கான் (வளரும் கவிமணி), நீர்கொழும்பு நிஸ்வத்துல் பாத்திமா (சிரேஷ்ட பண்முக ஆளுமை), புத்தளம் குத்சியா இம்தியாஸ் (கலைமணி), புத்தளம் பாத்திமா சுபியானி (சிறந்த சமூக செயற்பாட்டாளர்), கொழும்பு பாத்திமா சிஹாமா (வளரும் இசைப்புயல்), ஹுணுப்பிட்டிய சிவயோகினி (திரைப்பட உதவி இயக்குநர்) உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 46 பன்முக ஆளுமைகள் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
‘தேசிய விருது என்றால் என்ன?’ என்பது தொடர்பில், ‘தினச்சுடர்’ ஆசிரியர் முபாறக் அப்துல் மஜீத் கருத்து வெளியிடுகையில்,
‘தேசிய விருது’ என்றால்!
” ‘தேசிய விருது’ (National Award) என்பது, ஒரு நாட்டின் அளவில் சிறப்பான பங்களிப்பைச் செய்த தனி நபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வழங்கப்படும் கௌரவமாகும்.
ஒருவரின் திறமை, சாதனை, சேவை அல்லது சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
தேசிய விருது வழங்கப்படும் துறைகள்!
இலக்கியம் மற்றும் கவிதை, கலை மற்றும் கலாசாரம்,
ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறை,
சமூக சேவை கல்வி
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்பவைகளாகும்.
முக்கியமான விளக்கம்!
‘தேசிய விருது’ என்று பெயரிடப்பட்டிருப்பதால் மட்டும், அது ‘அரசாங்கத்தால் வழங்கப்படும் விருது’ என்று அர்த்தமல்ல.
தேசிய அளவில் செயல்படும் ஓர் அமைப்பு அல்லது நிறுவனம், தனது விருதுக்கு, ‘தேசிய விருது’ என்ற பெயரைப் பயன்படுத்தலாம்” என்று விளக்கமளித்தார்.









