சவூதியில் மரண தண்டனை விவகாரம்: அனோஜனை காக்க உடனடி சட்ட, இராஜதந்திர நடவடிக்கை தேவை – பைஸர் முஸ்தபா வலியுறுத்து!

“சவூதி அரேபியாவில் தண்டனையை எதிர்நோக்கியுள்ள நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற, அவசரமான சட்ட மற்றும் இராஜதந்திர தலையீடு அவசியம்” என, பாராளுமன்ற உறுப்பினர் – ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
“சவூதி அரேபியாவின் இறையாண்மைக்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்துக் கொண்டே, ஒரு இலங்கைப் பிரஜையின் உயிரைக் காக்கக் கிடைக்கும் அனைத்து சட்டபூர்வ வழிகளையும் பயன்படுத்த வேண்டும்” என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எது உறுதி, எது உறுதியாகவில்லை?
“இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் சமூக வலைத்தள கருத்து தொடர்பில், அனோஜனுக்கு கடந்த ஜூலை 15 அல்-அஹ்ஸா நீதிமன்றம் 5 ஆண்டு சிறை மற்றும் 30 இலட்சம் ரியால் அபராதம் விதித்தது. மேன்முறையீட்டில் அது மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக, அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மரண தண்டனையை வெளிவிவகார அமைச்சு இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. வழக்கில் ஆஜரான சட்டத்தரணி, தண்டனை அதிகரிக்கப்பட்டதாக ரியாத் தூதரகத்திற்கு வாய்மொழியாக தெரிவித்ததாகவும், எழுத்துபூர்வ தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும்,அமைச்சு கடந்த 18 ஆம் திகதி அறிவித்தது.
முக்கிய நம்பிக்கை என்னவென்றால், சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் ஒரு மாதத்திற்குள் மேன்முறையீடு செய்யலாம் என, சட்டத்தரணி ஆலோசனை வழங்கியுள்ளார். தூதரகம் அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
கருணைக்கான அடிப்படை!
அந்த சர்ச்சைக்குரிய கருத்து சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டு, அனோஜன் வீடியோ மூலம் பகிரங்க மன்னிப்புக் கோரியதாக கூறப்படுகிறது. அந்தக்கருத்தை நியாயப்படுத்த முடியாது என்றாலும், மனந்திருந்துதல் மற்றும் மன்னிப்பு என்பது இஸ்லாத்தில் உயர்ந்த இடத்தைப் பெறுவதால், அதன் அடிப்படையில் சவூதி அரேபிய அரசிடம் கருணை கோர முடியும்” எனவும் பைஸர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 1976 க்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படாதது போல, சட்டத்தில் தண்டனை இருப்பதற்கும், கருணை காட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு என்பதையும், அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
ரிசானா நபீக் விவகாரம்
தரும் பாடம்!
2005 இல் சவூதி அரேபியாவின் தவாத்மிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற 17 வயதான ரிசானா நபீக், போலிக் கடவுச்சீட்டு மூலம் 23 வயதாகக் காட்டப்பட்டு அனுப்பப்பட்டு, குழந்தை மரண வழக்கில் 2013 இல் தூக்கிலிடப்பட்ட சோகத்தை பைஸர் முஸ்தபா நினைவு படுத்தியுள்ளார்.
மரண தண்டனைக்குப் பிறகே சட்டத்தரணி, “மொழி பெயர்ப்பில் குளறுபடி, நிர்ப்பந்த வாக்கு மூலம்” என, அவரது வழக்கில் இருந்த குறைபாடுகளைப் Human Rights Watch பதிவு செய்திருந்தது.
“கருணை மனு என்பது, வலுவான சட்டப் பாதுகாப்பிற்கு மாற்றமாக இருக்கக்கூடாது. அதனுடன் இணைந்ததாக இருக்க வேண்டும். ரிசானாவின் கதையை மாற்ற முடியாது. ஆனால், அதிலிருந்து பாடம் கற்றோம் என்பதை இப்போது நிரூபிக்க வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார்.
பதிலளிக்கப்பட வேண்டிய கேள்விகள்!
இந்த வழக்கின் மேன்முறையீடு குறித்து, மட்டக்களப்பு பா.உ. சாணக்கியன் ராசமாணிக்கம் எழுப்பிய கேள்விகளையும் பைஸர் முஸ்தபா ஞாபகப்படுத்தியுள்ளார்.
“தூதரகம், ‘வெற்றி வாய்ப்பு குறைவு’ என்று கூறியும், குடும்பம், ‘மேன்முறையீடு செய்தது ஏன்? சட்டக் கட்டணமாக ரூ.18,90,766 வெளி விவகார அமைச்சின் செயலாளர் கணக்கில் செலுத்தச் சொன்னது யார்? மேன்முறையீட்டில் பெயர் இருந்த சட்டத்தரணி அத்லான் அப்துல்லாஹ் அல்-சுபைக்கு பதிலாக, வேறு ஒருவர் ஆஜரானது ஏன்?’ என்பன போன்ற கேள்விகளுக்கு அமைச்சு பதிலளிக்க வேண்டும். என்றாலும், இப்போது பொறுப்புக் கூறலை விட உயிரைக் காப்பதே முதன்மை” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இப்போது செய்ய வேண்டிய 3 விடயங்கள்!
- எழுத்துபூர்வ தீர்ப்பை உடனடியாகப் பெறுதல்.
- ஒரு மாத காலக்கெடுவுக்குள் உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டைத் தவறவிடாமல், அனுபவம் வாய்ந்த சவூதி அரேபிய சட்டத்தரணியை நியமித்து, குடும்பத்திற்கு தெளிவான தகவல் வழங்குதல்.
- சட்டப் போராட்டத்துடன் சேர்த்து, இரு நாட்டு நட்பின் அடிப்படையில் உயர்மட்டத்தில் கருணை கோருதல்.
“இது முஸ்லிம், தமிழ், சிங்களப் பிரச்சினை அல்ல. அரசாங்கம் – எதிர்க்கட்சி பிரச்சினையும் அல்ல. ஒரு இலங்கையரின் உயிர்ப் பிரச்சினை. பாராளுமன்றம் ஒரே குரலில் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும். இலக்கு சிக்கலானது அல்ல. சிவராசா அனோஜனை, உயிருடன் வீட்டிற்குக் கொண்டு வருவது தான் நம் அனைவரினதும் பொறுப்பான வேலை” என்றும் பைஸர் முஸ்தபா தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
