அனோஜனின் தண்டனை தொடர்பில் சவுதி அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – ரஷ்மி ரூமி

சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தம் சென்றிருந்த கிழக்கு மாகாணம், கல்முனையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மரண தண்டனை தொடர்பில் சவுதி அரேபிய அரசு மீள்பரிசீலனை செய்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக தமிழ் கலை பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச தலைவர் கலாநிதி ரஷ்மி ரூமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அனோஜன் சிவராசா தொடர்பான விவகாரம் தற்போது சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இவ்விடயம் மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் அணுகப்பட வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது செயலுக்காக அனோஜன் வருத்தம் தெரிவித்து பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதாகக் குறிப்பிடப்படும் நிலையில், அவரது நிலைமையை கருத்திற்கொண்டு சவுதி அதிகாரிகள் கருணையுடன் மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கலாநிதி ரஷ்மி ரூமி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு சவுதி அரேபியாவில் இவ்வாறான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் இந்தியாவில் உள்ள தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஊடாக சவுதி அரேபிய மன்னர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, அனோஜனின் தண்டனையை மறுபரிசீலனை செய்து அவரை விடுதலை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அனோஜனுக்கு விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் தடுத்து, அவர் பாதுகாப்பாக இலங்கைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் சமூகங்களும் தத்தமது அமைப்புகள் ஊடாக சவுதி அரேபிய அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி குரல் கொடுக்க வேண்டும் எனவும் கலாநிதி ரஷ்மி ரூமி வலியுறுத்தியுள்ளார்.
அனோஜன் சிவராசாவின் நிலைமையை மனிதாபிமான அடிப்படையில் கருத்திற்கொண்டு, அவரது தண்டனை தொடர்பில் மீள்பரிசீலனை மேற்கொண்டு, அவருக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை சவுதி அரசு முன்னெடுக்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
