உள்நாடு

அந்தமான் கடல் பகுதியில் குறைந்த தாழமுக்கம்.அடுத்த சில தினங்களில் கடும் மழை செய்யலாம்

வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதாகவும், அது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக வங்காள விரிகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.

இதன் காரணமாக, இது குறித்து மீனவர்கள் மற்றும் கரையோர வாசிகள் விழிப்புடன் இருக்குமாறும், எதிர்கால அறிவிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகள் குறித்து அவதானம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கி.மீ. வரை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

மேலும், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதுடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *